×

கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மத்திய அரசு வேதனைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ‘கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களை (டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள்) வேதனைப்பட வைக்க வேண்டாம்,’ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள் இரவும் பகலும் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர்.ஷா அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஸ்வநாதன், ‘‘கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பல இடங்களில் 3 மாதங்கள் வரை கூட சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. சில இடங்களில் ஊரடங்கை காரணம் காட்டி, சம்பள குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இது அதிகளவில் நடந்துள்ளது.  மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு, மருத்துவமனைக்கு அருகிலேயே தனிமைக்கான அறைகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் வீட்டுக்கு சென்றால், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்,’’ என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இப்பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளை பெற்று வருகிறது,’’ என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களை வேதனைப்படுத்தக் கூடாது. இது போன்ற பிரச்னைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. அரசே இப்பிரச்னையை தீர்க்க வேண்டும். நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவ ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை என்ற தகவல்கள் வருகின்றன. டெல்லி போன்ற சில இடங்களில் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதையும் பார்க்கிறோம். இவை எல்லாம் கவலை அளிக்கக் கூடியவை. இப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும்,’’ என்றனர்.

* நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவ ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை என்ற தகவல்கள் வருகின்றன. இவை எல்லாம் கவலை அளிக்கக் கூடியவை.

Tags : government ,Supreme Court ,doctors ,counsel ,war ,corporations ,Central , Corona, Federal Government, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...