×

வட்டிக்கு வட்டி போடுவதா? இஎம்ஐ சலுகை விவகாரத்தில் 3 நாளில் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இஎம்ஐ சலுகையை பயன்படுத்துவோருக்கு, வட்டிக்கு வட்டி போடுவதா என கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஒத்திவைக்கப்பட்ட மாத தவணைக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் 3 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.  கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், கடன்களை செலுத்துவதற்கான மாதாந்திர தவணையை மூன்று மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை என்று மத்திய அரசு சலுகை அளித்தது. இந்த கால அவகாசம் என்பது கடனை தாமதமாக செலுத்துவதற்கான கூடுதல் கால அவகாசம் மட்டுமே தவிர கடனோ, வட்டித் தொகையோ தள்ளுபடி செய்யப்படவில்லை.இதனால், கூடுதல் வட்டி வசூலிப்பதை எதிர்த்து, ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘இஎம்ஐ சலுகை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது. இதனால், வங்கிகளின் நிதி நிலை பாதிக்கப்படும். வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால், வங்கிகளுக்கு ₹2.01 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்,’ எனக் கூறியிருந்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த இக்கட்டான சூழலில், இஎம்ஐ செலுத்த கால அவகாச சலுகை தந்துவிட்டு, மறுபுறம் அதற்கு வட்டி வசூலிப்பது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அவகாசம் வழங்கிய சலுகை காலத்தில் கடன்களுக்கான எந்த வட்டியும் வசூலிக்கக் கூடாது அல்லது வட்டிக்கு வட்டி போடக் கூடாது என்ற இரண்டு விஷயங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதைப் பற்றி மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்,’’ என்றனர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதிலளிக்க அவகாசம் கோரினார். இந்த மாதம் 12ம் தேதி வரை அவகாசம் கொடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வட்டி தள்ளுபடி பற்றி நாங்கள் கூறவில்லை. அதேநேரத்தில், தள்ளி வைக்கப்பட்ட காலத்தில் செலுத்தப்படாத வட்டிக்கு மேல் வட்டி போடப்படுமா? அல்லது பின்னாளில் கடனை வசூலிக்கும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வருமா? இதில் இருதரப்பும் பாதிக்காத வகையில் சமநிலையான தீர்வு காணப்பட வேண்டும். இதுகுறித்து ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் கலந்து பேசி 3 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்தனர். மேலும், விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : EMI ,Supreme Court , EMI offer, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...