×

சொந்த ஊர் செல்ல பஸ் இல்ல.. ரயில் இல்ல.. விமானத்தில் வித்அவுட்ல பறக்க முயன்ற பலே ஆசாமி: பாதுகாப்பு படை மடக்கிப் பிடித்தது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கட்டிட விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை அந்த  வழியாக உள்ளே புகுந்த 35 வயது நபர், விமானங்கள் நிற்கும் பகுதியை நோக்கி ஓடினார். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்ற அபாயகரமான பொருட்கள் உள்ளனவா என்று சோதனையிட்டனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை. பின்னர், அவரிடம் விசாரித்தபோது, எனது பெயர் ஜோசப், கன்னியாகுமரியைச் சேர்ந்தவன், என்றார். பின்பு சிறிது நேரத்தில் அதை மாற்றி தனது பெயர் இந்தியன். தனது சொந்த ஊர் தர்மபுரி என்றார்.

எதற்காக இங்கு வந்தாய் என்று அதிகாரிகள் கேட்டதற்கு, சென்னைக்கு வேலை தேடிவந்தேன். ஆனால் இங்கு கொரோனா ஊரடங்கால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே நான் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தேன். பஸ், ரயில் இல்லை. விமானம் மட்டும்தான் செல்வதாக தகவல் கிடைத்தது. என்னிடம் விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லை. எனவே டிக்கெட் எடுக்காமல் கள்ளத்தனமாக விமானத்தில் சென்று விடலாம் என்று முடிவு செய்து குறுக்கு வழியில் விமானத்தில் ஏற சென்றேன், என்றார். சிறிது நேரம் கழித்து விமானமே என் அப்பாவுடையதுதான். நான் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும், என்றார்.

அவருடைய முன்னுக்குப்பின் முரணான பேச்சால் குழப்பமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த மர்ம ஆசாமியை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணையிலும் மாற்றி, மாற்றி அவர் பேசினார். எனவே, மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, சென்னையில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழுடன் ஒப்படைத்தால் மட்டுமே மனநல மருத்துவமனையில் சேர்க்க முடியும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து போலீசார் பரிசோதனைக்காக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிசோதனைமுடிவு கிடைக்க 2, 3 நாட்களுக்கு மேலாகும் என்பதா்ல அதுவரை இவரை திரிசூலத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, இந்த நபர் பற்றிய விவரங்களை போலீசார், தர்மபுரி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அலுவலகங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இவருடைய குடும்பத்தினார் யாராவது வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Bale Assamese ,Air Force , Chennai Airport, Central Occupational Security Forces
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...