×

பழக்கடைகளை முதல் தளத்திற்கு மாற்ற எதிர்ப்பு: மாதவரம் பஸ் நிலையத்தில் வியாபாரிகள் தர்ணா

திருவொற்றியூர்: கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி மற்றும் பழக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, காய்கறி மார்க்கெட் திருமழிசையிலும், பழ மார்க்கெட் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்திலும் சில தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.  இதையடுத்து மாதவரம் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 200 பழக் கடைகள் அமைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் கூடம் அமைக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிஎம்டிஏ அதிகாரிகள் இந்த கடைகள் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.
ஆனாலும் இங்கு அதிகப்படியான வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், பஸ் நிலைய தரை தளத்தில் உள்ள 200 கடைகளில் 100 கடைகளை முதல் தளத்தில் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய கடைகளை தேர்வு செய்வதற்காக குலுக்கல் முறை நடத்தவும் சிஎம்டிஏ அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பழக்கடைகளை முதல் தளத்தில் இடமாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை பழ வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மவுனமாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள், இங்கு வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும்  எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. மேலும் இங்கு நெருக்கமாக கூடாரம் அமைத்ததும் அதிகாரிகள்தான்.

இப்போது சமூக இடைவெளியை காரணம் காட்டி 50 சதவீத கடைகளை எங்களிடம் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக   முதல் தளத்திற்கு இடமாற்றம் செய்கிறார்கள். முதல் தளத்தில் எங்களால் வியாபாரம் செய்ய முடியாது. அதிகாரிகள் இந்த முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்றனர். இதையடுத்து போலீசார் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வாழைப்பழ வியாபாரத்தை தரைதளத்தில் நடத்தவும் மற்ற பழங்களை முதல் தளத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக ஆந்திரா பேருந்து நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒதுக்கீட்டில் முறைகேடு
கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 850 பழக்கடைகள் இயங்கி வந்தன. தற்போது இந்த பழக்கடைகள் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலைய வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200 பேருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படாததால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த 200 கடைகளிலும்  ஒரு சிலர் பினாமி பெயரில் பல கடைகளை எடுத்து நடத்தி வருவதாகவும், இதற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Tags : merchants ,Madhavaram ,bus station , Habits, Madhavaram Bus Stand, Merchants Darna
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...