×

இந்தியா, அமெரிக்காவில் சகிப்புத் தன்மைக்கான டிஎன்ஏ மாயமானது: ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்க நாடுகளில் இருந்த வெளிப்படை தன்மை, சகிப்பு தன்மைக்கான டிஎன்ஏ மறைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஊரடங்கு, இன்று வரையில் அமலில் இருந்து வருகின்றது. ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க முன்னாள் தூதர் நிகோலஸ் பர்னசுடன் நேற்று  காணொளி மூலமாக கலந்துரையாடினார்.

அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது: நாட்டில் ஒருதலைப்பட்சமான தலைமையின் கீழான நடவடிக்கை காரணமாக அச்சமான சூழல் நிலவுகிறது. இது அழிவுக்கானது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியா-அமெரிக்காவில் சகிப்பு தன்மை என்ற ஒழுங்கமைப்பின் காரணமாக இருநாடுகளின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தது ஆனால், இதற்கு முன்பு பார்த்தது போன்ற சகிப்புத்தன்மை இரு நாடுகளிலும் தற்போது காணப்படவில்லை. நமது டிஎன்ஏ.வானது சகிப்புத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். புது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

நாம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த டிஎன்ஏ.வும் இருநாடுகளிலும் மறைந்து விட்டது. இதற்கு முன் நான் பார்த்த சகிப்புத்தன்மை இப்போது இல்லை. அது மறைந்து விட்டது. அதனை நான் அமெரிக்காவிலும் பார்க்கவில்லை. இந்தியாவிலும் பார்க்கவில்லை.  பிரிவினையை உருவாக்கி நாட்டை பிரித்தவர்கள் தேசியவாதிகள் என தங்களை கூறிக்கொள்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசானது எதிர்கட்சிகளின் கருத்தை கேட்காத சர்வாதிகார போக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜ பதிலடி
இந்திய-சீன எல்லையில் நிலவும் பிரச்னையில் மத்திய அரசை ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தியின் 2017ம் ஆண்டு டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘பதற்றம் நிறைந்த சீன எல்லை விவகாரம் குறித்த உண்மைகளை வெளியிடும்படி பிரதமரை ராகுல் வலியுறுத்தி கேட்கிறார். சீன விவகாரம் குறித்து அவர் 2 விதமாக பேசுகிறார். டோக்லாம் பிரச்னையின்போது சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்தாரா? முதலில் இதை மறுத்தவர், பொதுமக்கள் சர்ச்சையாக்கியதும் உண்மையை ஒப்புக் கொண்டார்,’ என்று கூறியுள்ளார்.

Tags : India ,US ,Rahul Gandhi , India, America, Tolerance, DNA, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…