×

ஊர் பெயர்களின் உச்சரிப்பு அரசாணை கொரோனா பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்பும் முடிவு: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்பை மக்களிடமிருந்து திசை திருப்பவே, ஊர் பெயர்களின் உச்சரிப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்று தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். தமிழகம் முழுவதும் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புபடி ஆங்கிலத்தில் அமையுமாறு மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இன்று தமிழகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்கிறது.  இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த பெயர் மாற்ற அறிவிப்பு தேவைதானா? உரிய முறையில் கருத்து கேட்காமல் இப்படி அவசரமாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட காரணம் என்ன என்பது ஒரு விமர்சனத்தை உருவாகியுள்ளது. இதுகுறித்து, திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கூறியதாவது:  இந்த அரசாணை என்பது முற்றிலுமாக மக்களிடம் பேசும் பொருளாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் அறிவித்திருக்கிறார்கள். கொரோனா வேகமாக பரவும் இந்த சூழ்நிலையில் அதை திசை திருப்பும் விதமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் இதை அறிவித்தனர். அப்போது முடிவு செய்த ஒன்றை இப்போது ஏன் வெளியிட வேண்டும்.
.
 இந்த நேரத்தில் வெளியிடுவதற்கு உள்நோக்கம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. இது என்னாகும் என்றால் எனது ஊர் பெயர் மாறிவிட்டதா, உனது ஊர் பெயர் மாறிவிட்டதா  என்று மக்கள் பேச தொடங்கிவிடுவார்கள். குறிப்பாக சென்னையில் இருக்கக்கூடிய கொரோனா தொற்று வேகம் குறித்த விமர்சனங்களை திசை திருப்பவே இதை அறிவித்துள்ளனர். இது எனது நேரடியான குற்றச்சாட்டு.  தமிழ் வளர்ச்சி துறை யாரிடமும் கலந்து செய்யவில்லை. மாற்றங்களை செய்யும் போது ஒலிப்பியல் நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை. அவசர அவசரமாக செய்வதால் பல விமர்சனங்கள் வரும் என்றும், அதன் மூலம் கொரோனா பிரச்னையை முற்றிலுமாக திசை திருப்புவதற்காகவே அவசர அவசரமாக இதை அறிவித்துள்ளனர்.  இதில் நிறைய தவறுகள் உள்ளன. ஒரு ஊருக்கு எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை இன்னொரு ஊருக்கான பெயர் உச்சரிப்பில் அவர்கள் எடுக்கவில்லை. உதாரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர்கள் போட்டிருக்கும் ஆங்கில உச்சரிப்பு எழுத்தின் அமைப்பு, அதே மாதிரி  இருக்கக்கூடிய கோயம்புத்தூருக்கு வேறு விதமாக கொடுக்கின்றனர்.

 பன்னாட்டு அளவிலான ஒலிப்பியியல் நெறிமுறைகளை கலந்து ஆலோசித்து எடுத்திருக்கலாம். எதுவுமே இல்லாமல், என்றைக்கோ சொன்ன ஒன்றை இன்றைக்கு திடீரென வெளியிடுவது கொரோனா பிரச்னையிலிருந்து மக்களை திசை திருப்பவே. ஒன்று இதற்காக மாற்றியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், மலையாள மாந்திரீகர்கள் யாராவது ஊர் பெயர்களை மாற்றினால் கொரோனா தொற்று குறைந்துவிடும் என்று கூறியிருக்க வேண்டும். அதை நம்பி இதுபோன்ற அவசர முடிவுகளை எடுத்திருக்கலாம். இல்லை என்றால் இப்போது போய் ஏன் சொல்ல  வேண்டும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது ஒரு அரசுக்கு தெரிய வேண்டாமா?  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,City , Pronunciation ,city names , distract people ,government coronation issue, Gold
× RELATED சென்னை மாநகரில் சட்டவிரோதமாக...