×

முகக்கவசம் அணிவது தொடர்பான வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:  முகக்கவசங்களை அணிவது, அவற்றின் தரம், பயன்படுத்திய பின் அழிப்பது குறித்த வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமலும், மற்றவர்களிடமிருந்து தொற்றிவிடாமலும் இருந்து அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.  அதன்அடிப்படையில் என்-95 மாஸ்க், அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மாஸ்க், 3 லேயர்கள் கொண்ட மாஸ்க், வெட்டிவேர் மாஸ்க், துணி மாஸ்க், முகம் வடிவிலான மாஸ்க் என பலவகையிலான மாஸ்க்குகள் தற்போது விற்பனைக்கு வருகிறது.

 எந்த வகையான மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் தெரியாமல் மக்கள் எல்லா வகையான மாஸ்க்குகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். எந்த மாதிரியான முகக்கவசங்களை, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும். அதன் தரம் என்ன. எவற்றை எந்த வயதினர் எப்படி உபயோகப்படுத்த வேண்டும். அதன் காலாவதியாகும் தேதி என்ன என்பது குறித்து எந்தவொரு விதிமுறைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லை. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் இல்லை. இதை பயன்படுத்தி பலர் தரமற்ற மாஸ்க்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். எனவே, முகக்கவசங்களின் தரம், அவற்றை எப்படி பயன்படுத்துவது போன்றவை குறித்து மக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.Tags : state governments , Central , state governments, respond ,issue , wearing a mask
× RELATED கொரோனா பணியில் உள்ள டாக்டர்,...