×

கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு

* தொடர்பில் உள்ளவர்களை முகாமில் தங்கவைக்க முடிவு
* மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்பில் உள்ளவர்களையும் மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட சில நபர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்துதலையும் மீறி வெளியில் செல்லும் போது பிற நபர்களும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் அவர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் கோவிட்-19 மையங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Tags : homes , Cases , 40 people fleeing isolation ,homes affected , coronavirus infection
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை