×

உப்பில் இருந்து தயாரித்து அசத்துகிறது ‘சிக்ரி’ மூன்றே ரூபாய்க்கு கிருமிநாசினி

* 3 லட்சம் முதலீட்டில் தினமும் 100 லிட்டர் தயாரிக்கலாம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) உள்ளது. இங்குள்ள விஞ்ஞானிகள் உப்பில் இருந்து கிருமிநாசினியை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி கூறியதாவது: எங்கள் விஞ்ஞானிகள் குழுவினர் சாதாரண சோடியம் குளோரைடு உப்பை (வீட்டில் பயன்படுத்தப்படும் கல் உப்பு) பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தடுப்புக்காக பயன்படுத்தக்கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். சோடியம் ஹைப்போ குளோரைட் பெரும்பாலும் வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் சந்தைகளில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியாகும்.

சோடியம் குளோரைடு உப்பை தண்ணீரில் கரைத்து எலக்ட்ரோ கெமிக்கல் முறையில் மின்சாரத்தை பாய்ச்சும்போது சோடியம் ஹைப்போ குளோரைடாக மாறும். இந்த முறையில் ஒரு லிட்டர் கிருமிநாசினியை 3 ரூபாயில் உற்பத்தி செய்யலாம். எந்த சிறு, குறு தொழில் நிறுவனமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் முதலீட்டில் 100 சதுர அடி பரப்பில், ஒரு பணியாளர் உதவியுடன் தினமும் 100 லிட்டர் கிருமிநாசினியை தயாரிக்கலாம். குளோரின் வாயுவின் பயன்பாடு இல்லாததால் மாசற்ற மற்றும் ஆபத்து இல்லாத ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குகிறது. தொழில் முனைவோர்கள் மேலும் விவரங்களுக்கு 04565-241506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Sikri , Disinfectant, Sivaganga, Karaikudi
× RELATED ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்...