சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு: பீஜிங்கில் இறைச்சிக் கடை ஊழியர்களுக்கு தொற்று உறுதி

பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்திலிருந்து முழுமையாக விடைபெறும் நிலைக்கு வந்த சீனாவில், தலைநகர் பீஜிங்கில் 56 நாட்களுக்கு பின்னர் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடுமையான விதிகள் அமலில் இருந்தும் பீஜிங்கில் கொரோனா பரவியது சீன அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பீஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். இதையடுத்து, பீஜிங்கில் உள்ள இறைச்சி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளிகளை திறக்கும் முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் பீஜிங்கில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பீஜிங்கின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா உருவான ஹூபெய் மாகாணத்தில் கடந்த 24 நாட்களாக புதிய தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: