×

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரி திமுக வழக்கு: வரும் 16ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு வரும் 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி 2017ல் பதவி ஏற்றதும், பிப். 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கடந்த பிப்.4ம் தேதி வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், திமுக தரப்பில் கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 3 மாதங்கள் கடந்துவிட்டது. சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மணிப்பூர் மாநில வழக்கு போன்று, இந்த மனுவையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசரமாக கருதி விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Tags : DMK ,SC ,O.Panerselvam DMK ,O.Panneerselvam , DMK case,SC dismisses ,11 MLAs, including , O.Panneerselvam
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி