×

விமான சேவை அதிகரித்தும் கொரோனா பீதியால் சென்னை வர பயணிகள் தயக்கம்

சென்னை:  சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில்  கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதுவரை அதிகபட்சமாக 48 விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் நேற்று 58 விமான சேவைகள் இயக்கப்பட்டன. அதில் சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, வாரணாசி, அந்தமான், ஐதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 29 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்களில் பயணிக்க சுமார் 3,500 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல், வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து நேற்று சென்னைக்கு 29 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் பயணிக்க சுமார் 1,800 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.  சென்னையில் நேற்று ஒரேநாளில் 58 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சுமார் 5,300 பேர் பயணம் செய்தனர். ஆனால், இதில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் அதிகமாகவும், சென்னைக்கு வரும் பயணிகள் குறைவாகவும் இருந்தனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 7 பேரும், கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு 8 பேரும், தூத்துக்குடியிலிருந்து 10 பேரும், மதுரையிலிருந்து சென்னைக்கு 18 பேர் மட்டும் முன்பதிவு செய்திருந்தனர். கோவைக்கு பயணிகள் இல்லாமல் நேற்று விமான சேவையே இல்லை. ஆனால் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் நேற்று பயணிக்க 180 பேரும், கவுகாத்திக்கு 176 பேரும், மதுரைக்கு 92 பேரும், தூத்துக்குடிக்கு 56 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Passengers ,coronation panic Passengers ,Chennai ,coronation panic , Passengers, reluctant , Chennai, coronation panic
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...