×

கறம்பக்குடி தாசில்தாரிடம் 38 குடும்பத்தினர் ரேசன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்து ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே தலித் குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைமையில் 38 குடும்பத்தினர் ரேசன் கார்டு, ஆதார் அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரம்பவிடுதி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கிரிக்கெட் விளையாடியவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இதில் தலித் சமூதாயத்தினர் தாக்கப்பட்டதற்கு மற்றொரு தரப்பை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் காரணம் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும், மேலும் தலித் சமுதாயத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று வடக்கு மாவட்டம் செயலாளர் விடுதலை கனல் தலைமையில், வடக்கு மாவட்டம் துணை செயலாளர் சந்திரபாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வ ரத்தினம் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளை சக்திவேல், ஒன்றிய பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் தலித் குடும்பத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகை செய்ய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் கரம்பவிடுதி கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் 38 பேர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை வட்டாட்சியர் ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைத்து கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : families ,Karambakkudi Dasildar , Karambakkudi, Dasildar, Ration Card, Aadhaar Card, Demonstration
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...