×

அமைச்சர் பங்கேற்ற விழாவில் சமூக இடைவெளியை மதிக்காமல் திரண்ட மக்கள்: கொரோனா பரவும் அபாயம்

திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில், ஆயிரக்கணக்கானோர் சமூக இடைவெளியின்றி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும், மீண்டும் அவரது நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றி மக்களை திரட்டுவதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல்லில் மார்க்கெட் குமரன் தெருவில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்தார். ஆனால் அமைச்சர் நிவாரண பொருட்களை வழங்காமல் சேரிலேயே அமர்ந்திருந்தார். இதனால் கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இங்கு நிவாரணப் பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், பலர் முகக்கவசம் அணியாமலும் வந்திருந்தனர். மதிய வேளையில்  கொளுத்திய வெயிலில் சுமார் 2 மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து, மக்கள் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாக்கள், தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிவாரணப் பொருட்கள் வழங்கும் முன்பு அந்தந்த பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும், கட்சி நிர்வாகிகள் முறையாக டோக்கன் வழங்கவில்லை. இதனால் நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் பலரும் குடும்ப அட்டையுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். கடைசியி–்ல் அவர்களுக்கு பொருட்கள் வழங்காததால் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.

Tags : ceremony ,minister , Minister, Social Gap, Corona
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா