×

ஜாமீன் ஆணை பெற்றும் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் சிறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்

* பணம் கொடுத்தா பாஸ்ட், இல்லையென்றால் லேட்
* சிறைத்துறையின் அலம்பலால் அல்லாடும் அப்பாவிகள்

வேலூர்: நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றும், கைதிகளை விடுவிப்பதில் காசு பார்க்கும் சிறைத்துறையினரின் அலம்பலால் அப்பாவிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும், இவ்விஷயத்தில் அப்பட்டமாகவே மனித உரிமைமீறல்கள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், சிறுவர்களுக்கான பார்ஸ்டல் பள்ளிகள் 12, சிறப்பு துணைச்சிறைகள் ஆண்கள் 2, பெண்கள் 3, மாவட்ட சிறைகள் 9, 134 கிளைச்சிறைகள், 2 திறந்தவெளி சிறைச்சாைலகள் உள்ளன. இவற்றில் 22 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். தற்போது தமிழக சிறைகளில் 14 ஆயிரம் கைதிகள் வரை உள்ளனர். தமிழக சிறைகளில் ராஜீவ்காந்தி கொலை தண்டனை கைதிகள், மதஅடிப்படைவாத இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகளும் கைதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தண்டனை கைதிகளை தவிர்த்து விசாரணை கைதிகளும் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

இவர்களில் ஜாமீனில் வெளிவர முடியாத விசாரணை கைதிகளும் அடக்கம். இவ்வாறு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்ப ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஜாமீன் வழங்கப்படுபவரின் வழக்கறிஞர் அல்லது அவரை சார்ந்தவர்கள் ஜாமீன் உத்தரவை சிறைச்சாலையில் ஒப்படைத்த 3 மணிநேரத்துக்குள் ஜாமீன் வழக்கப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் இங்குதான் சிறைத்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் கரங்களை நீட்டுகின்றனர். ஜாமீன் உத்தரவுடன் வரும் கைதிகளை சார்ந்தவர்களிடம், அந்த உத்தரவை பெற்றுக் கொண்டு மணி கணக்கில் காக்க வைக்கின்றனர். இந்த காத்திருப்புக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் அல்லது வழக்கறிஞருடன் வருபவர்கள் உடனடியாக தங்களிடம் ஆணையை பெறும் சிறைக்காவலர்களிடம் ₹2 ஆயிரம், ₹3 ஆயிரம் வரை உடனடியாக வழங்கி விடுகின்றனர். இதனால் அவர்களை சார்ந்த கைதிகள், சிறையின் வழக்கமான நடைமுறைகள் உடனுக்குடன் முடிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வேலூர் சரகத்தில் வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை, அரக்கோணம், வாலாஜா, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வந்தவாசி, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, செங்கம் ஆகிய கிளை சிறைகளில் வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் திங்கள் மற்றும் வியாழக்–்கிழமைகளில் 120 ஜாமீன் உத்தரவுகள் வருகின்றன. விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் 30 முதல் 40 ஜாமீன் உத்தரவுகள் வருகின்றன. கிளை சிறைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே ஜாமீன் உத்தரவுகளின் எண்ணிக்கை இருக்கும். அந்த வகையில் வேலூர் மத்திய சிறையில் மட்டும் ஜாமீன் உத்தரவுடன் வரும் கைதிகளை சார்ந்தவர்கள் மூலம் மட்டும் லட்சக்கணக்கில் சிறைத்துறையை சார்ந்தவர்கள் வருவாய் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் கொரோனா ஊரடங்கு அமலான மார்ச் 25ம் தேதி தொடங்கி ஒரு வார காலத்தில் வேலூர் மத்திய சிறையில் இருந்து 471 பேரும், பெண்கள் தனிச்சிறை மற்றும் கிளைச்சிறைகளில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்களும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாராயம் உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றவர்களும் உடனுக்குடன் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த நிலை இப்போது வரை தொடர்கிறது. இவ்வாறு ஜாமீனில் வெளியில் வருபவர்கள் மூலம் கடந்த 50 நாட்களில் வேலூர் சிறைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டும் பல லட்சங்களை பார்த்துவிட்டனர் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
அதேநேரத்தில் அன்றாடங்காய்ச்சிகள், சிறையின் மாமூல் விஷயம் அறியாத அப்பாவிகள், அறிந்தும் யாரை அணுகுவது என்பது தெரியாமல் தங்களை சார்ந்தவர்களுக்கு எப்படியாவது பணத்தை புரட்டி ஜாமீன் உத்தரவை பெற்று சிறைக்காவலர்களிடம் வழங்கிவிட்டு கால்கடுக்க காத்திருக்கும் பரிதாப நிலையும் மறுபுறம் தொடர்ந்து வருகிறது.

இதுதவிர வேலூர் சிறை மட்டுமின்றி தமிழக சிறைகளில் பணத்தை அள்ளிவீசினால் எதுவும் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்த நிலை மாறாத வரை சிறைக்குள் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு வழியில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பணம் பெறுவதற்கு மாற்று இடம்
ஜாமீன் உத்தரவுடன் வருபவர்களிடம் பணம் பெறுவதை விஜிலென்ஸ் போலீசார் மோப்பம் பிடித்ததை அறிந்த சம்பந்தப்பட்ட வேலூர் சிறையை சேர்ந்த சிறைக்காவலர்கள் 2 பேர், பாகாயம், தொரப்பாடி பகுதியில் உள்ள இரண்டு பங்க் கடைகளை அதற்காக தேர்வு செய்து அங்கு பணம் பெற்று வருகின்றனராம். அதோடு, எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உயர்அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றும் சொல்லி வருகிறார்களாம்.

வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை
வேலூர் மத்திய சிறை 1867ம் ஆண்டு தொரப்பாடி பகுதியில் 153 ஏக்கர் பரப்பளவில் 2,130 பேரை அடைக்கும் வகையில் கட்டப்பட்டது. ஐரோப்பிய கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இச்சிைறயில் சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆர்.வெங்கட்ராமன் 30.11.1940 முதல் 25.9.1941 வரை அரசியல் கைதியாக இருந்துள்ளார். அதேபோல் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா 16.8.1962 முதல் 24.10.1962 வரை அரசியல் கைதியாக இருந்துள்ளார். இவருடன் திராவிட இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். வேலூர் பெண்கள் தனிச்சிறை சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாண பெண்கள் சிறையாக இருந்தது. இச்சிறை கட்டி முடிக்கப்பட்டு 15.04.1930ல் செயல்பாட்டுக்கு வந்தது.

13.62 ஏக்கர் பரப்பளவில் 3.23 ஏக்கர் பரப்பில் 412 பேரை அடைக்கும் வகையில் கட்டிடங்களை கொண்டது. ஆரம்பத்தில் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடைக்கப்பட்டனர். சுதந்திரத்துக்கு பின்னர் இது பெண்கள் தனிச்சிறையாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு டாக்டர் ராதாபாய் சுப்பராயா, டாக்டர் ருக்மணி லட்சுமிபதி, அன்மணராஜ் ஆகிய பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஜாமீன் அல்லது பிணை ஆணை
ஜாமீன் உத்தரவு அல்லது பிணை ஆணை அல்லது பிணைய ஆணை என்பது நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும், அவ்வாறு இல்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும். அதன்பேரிலேயே ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் பிணையில் வெளியே வந்தால், அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றம்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் சந்தேகம் எழுந்தால் ஜாமீன் மறுக்கப்படலாம்.

Tags : release ,detainees ,prisons ,prisoners , Bail, inmates, prisons, bribery
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து விரைவில்...