×

திருச்சி முக்கொம்பு அருகே மேலணை பெருவளை வாய்க்கால் பாலம் இடிந்தது: போக்குவரத்து துண்டிப்பால் 40 கிராம மக்கள் தவிப்பு

மண்ணச்சநல்லூர்: திருச்சி முக்கொம்பு அருகே மேலணை பெருவளை வாய்க்கால் பழமையான பாலம் இடிந்து விழுந்ததால் 40 கிராம மக்கள் போக்குவரத்தின்றி தவித்து வருகின்றனர். மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் திருச்சி முக்கொம்பு வருகிறது. இங்கிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை சென்று அங்கிருந்து 2ஆக பிரிந்து பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறது. முக்கொம்பு மேலணை அருகே புள்ளம்பாடி, பெருவளப்பூர் பாசன வாய்க்காலுக்கு காவிரி நீர் பிரிகிறது. இதில் பெருவளப்பூர் பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீரை தேக்கி அனுப்ப 4மதகு கொண்ட மேலணை பெருவளை வாய்க்கால் அமைந்துள்ளது. கடந்த 1959ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், 39 கி.மீ நீளமுள்ள பெருவளை வாய்க்கால் தண்ணீர் பாசனம் மூலமாக 19 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெருவளை வாய்க்காலில் முக்கொம்பில் இருந்து சிறுகாம்பூர் செல்லும் சாலையில் மதகு அமைந்துள்ளது. இந்த மதகில் பொதுமக்கள் போக்குவரத்திற்காக பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

இதில் பஸ் போக்குவரத்து கிடையாது. இருப்பினும் இதன் வழியே சென்னகரை, கல்லூர், வேப்பத்துரை, மண்பாளையம், சித்தாம்பூர், தெற்கு சித்தாம்பூர், சோமங்கலம், பூசாரிப்பட்டி, நெமிலி வேமூர், குருவம்பட்டி உள்ளிட்ட 40 கிராமங்களுக்கும், விவசாய வேலைகளுக்காகவும் பொதுமக்கள் இலகு ரக வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது பெருவளை வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொக்லின் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தூர்வாரும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் பாலத்தின் தடுப்பு சுவரும், பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததால் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாகவே பாலம் ஒரு புறமாக சாய்ந்து இருந்ததாகவும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை கவனித்து சீரமைத்து இருந்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பாலம் சரிந்து விழுந்தபோது அந்த பாலத்தின் மேல் எந்த வாகனமாவது சென்றிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்க கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது.

2018ல் இடிந்து விழுந்த முக்கொம்பு மேலணை
முக்கொம்பில், கொள்ளிடம் மேலணையில் 192 ஆண்டுக்கு முன் 45 மதகுகளுடன் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பாலம் கடந்த 2018ம் ஆண்டு அதிகம் தண்ணீர் வரத்து காரணமாக ஆகஸ்ட் 22ம் தேதி இரவு 8.30 மணிக்கு 6ல் இருந்து 13 வரை உள்ள 8மதகுகள் இடிந்து விழுந்தது. இதனால் தண்ணீர் முழுவதும் வீணாகி கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.



Tags : bridge ,melanai ,Trichy Trichy mukkompu ,drain , Trichy drain, drain over the drain
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...