×

காற்றாலை மின்பாதை பணிக்காக மானூர் பெரியகுளத்தில் அழிக்கப்படும் பனை மரங்கள்: குளக்கரைகள் பலமிழக்கும் அபாயம்

மானூர்: காற்றாலை மின்பாதை அமைப்பதற்காக மானூர் பெரியகுளம் கரையில் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவது பொதுமக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. குளத்தின் கரைகள் பலமிழந்தால் விவசாய நிலங்கள் அழியும் அபாயமும் நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் 1120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளம் நிரம்பினால் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெறும். மறைமுகமாக 1500 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம், கரம்பை, குத்தாலப்பேரி, ஜகான்புரம், லட்சுமியாபுரம், ரஸ்தா, வெங்கலபொட்டல், பட்டவர்த்தி, நாஞ்சான்குளம், கட்டப்புளி, குப்பனாபுரம் ஆகிய கிராமங்கள் நேரடி பாசனம் பெறுகின்றன. இதேபோல் மானூர் குளத்தின் மறுகால் மூலம் நிரம்பும் பள்ளமடை குளத்தின் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

மேலும் பள்ளமடை, பல்லிக்கோட்டை, புதூர், புளியங்கொட்டாரம், நல்லம்மாள்புரம், தென்கலம், அலவந்தான்குளம், நெல்லை திருத்து கிராமங்கள் நேரடி பாசனமும், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மறைமுக பாசனமும் பெறும்.  இக்குளத்தின் கரை மட்டும் சுமார் 6.2 கிலோ மீட்டர் நீளமுள்ளது. பல்வேறு கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இதனை பாதுகாப்பதற்காக 6240 மீட்டர் நீளமுள்ள குளத்துக் கரைகளில் முன்னோர் ஏராளமான பனைமரங்கள் உள்ளிட்ட பல வகை மரங்களை நட்டு வளர்த்துள்ளனர். பல நூறு ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்த நிலையில் இம்மரங்களும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் பலன் கொடுத்து வருகின்றன. இதைச்சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஓலைக்குடிசை வீடுகளே இருந்து வந்தன. இதனைக் கருத்தில் கொண்ட மூதாதையர்கள் தங்கள் தலைமுறைகளுக்காக பனை மரங்களை அதிகம் உருவாக்கியுள்ளனர்.

தற்பொழுதும் இக்கிராம மக்களில் பலர் ஓலைக்குடிசை வீடுகளை பயன்படுத்துவதோடு மாட்டுக்குடில், ஆட்டுக்குடில், மற்றும் பதனீர், நுங்கு, ஓலை, நார்ப்பெட்டிகள் என பல்வேறு வகையில் பொருட்களை உற்பத்தி செய்து பெற்று பயன் பெறுகின்றனர். சமீபகாலமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகளால் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினரும் குளத்து கரைகளில் பனை மரங்களை விதைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மானூர் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்படும் தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களின் மின்பாதைக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஏராளமான பனை மரங்களை சிலர் வெட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.

காற்றாலை நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், போலீசாரையும் சரிகட்டுவதோடு புகார் அளிப்பவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இதனால் மானூர் பெரியகுளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் குளத்தின் கரைகளில் அமைக்கப்படும் மின்பாதைக்கான மின் கம்பங்கள் அடிக்கடி பலமிழந்து சாய்ந்து விழுவதால் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்வோரும், விவசாய நிலங்களுக்கு ெசல்வோரும் உயிர் பயத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் மூலாதாரமாக விளங்கும் மானூர் குளத்தின் கரைகளை பாதுகாப்பதோடு, பனைகள் வெட்டி அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Manor ,Manoor , Windmill, Manoor Periyakulam, Palm Trees, Ponds
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்