×

மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம்: துரத்தியவர்களை விரட்டியதால் அலறியடித்து ஓட்டம்

மேட்டூர்: மேட்டூர் அருகே காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து, அட்டகாசம் செய்ததால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ளது பொரசமரத்துக்காடு, ஏழரைமத்திக்காடு. இக்கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் யானை, மான்கள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்கினங்கள் வசித்து வருகின்றன. கோடை காலத்தின்போது, தண்ணீர் மற்றும் உணவு தேடி மான்கள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கை. அவ்வப்போது யானைகளும் ஊருக்குள் வந்து செல்லும். சில சமயங்களில் சிறுத்தைகளும் வந்து சென்றுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, ஊருக்கு அருகே விவசாய தோட்டத்தில் 5 யானைகள் முகாமிட்டிருந்தன.  இதனை கண்டு விவசாய தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் ஓட்டம் பிடித்தனர். ஒருசிலர், யானைகளை விரட்டும் முயற்சியில் தன்னிச்சையாக இறங்கினர். அப்போது, சிலர் யானைகளின் மிக அருகில் சென்று பட்டாசுகளை கொளுத்தி போட்டு, யானைகளை விரட்டும் விபரீத முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், யானைகள் சற்றும் சளைக்காமல் பூசணிக்காய் தோட்டத்தை துவம்சம் செய்தன.

மேலும், கிராம மக்களை விரட்டியது. இதனால், கிராம மக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் யானை கூட்டம் முகாமிட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்த தகவலின்பேரில், மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை முடுக்கி விட்டனர். அப்போது, டமாரம் அடித்தனர். இதையடுத்து மாந்தோப்பு, தர்பூசணி தோட்டம், குச்சிக்கிழங்கு தோட்டம் மற்றும் இதர விவசாய தோட்டங்களில் நுழைந்தவாறு யானைகள் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன. மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள் நுழையாத வகையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : town ,village ,Mettur Herd ,turattiyavarkalai , Mettur, elephants
× RELATED பொறுப்பேற்பு