×

உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கே கொரோனாவால் அதிக ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: உலக நாடுகளுக்கு மாறாக இந்தியாவில், கொரோனாவால் ஆண்களை விட பெண்களுக்கே இறப்பு அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரின் சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இணைந்து முதல் முறையாக இந்தியாவில் ‘கொரோனா இறப்பில் பாலின வேறுபாடு’ குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மே 20ம் தேதி வரையிலான இறப்புகள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அப்போது, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 12 ஆயிரத்து 27. பலி 3,433 பேர். இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகும்.
ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், உலக நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் எண்ணிக்கை அதிகமிருந்தால், பாதிக்கப்படும் பெண்களில் இறப்பவர்கள் அதிகம் உள்ளனர் என்கிறது இந்த ஆய்வு.

அதாவது, கொரோனா பாதித்த பெண்களில் 3.3 சதவீதம் இறந்துள்ளனர். இது ஆண்களின் இறப்பு விகதம் 2.9 மட்டுமே. 40-49 வயதுக்கு உட்பட்ட பெண்களின் இறப்பு விகிதம் அதிகபட்சமாக 3.2 சதவீதமாக உள்ளது. இதுவே, ஆண்களில் 2.1 சதவீதமாக உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 73,654, பெண்களின் எண்ணிக்கை 38,373. இறந்தவர்களின் ஆண்கள் 2,165, பெண்கள் 1,268. இதில் முக்கியமான விஷயம், 5-19 வயதுக்கு உட்பட்டவர்களில் இறந்தவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான். இந்த வயதுப் பிரிவில் பலியாகும் பெண்கள் விகிதம் 0.6 சதவீதமாகும்.

உலக நாடுகளைப் பார்க்கையில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்படுவது, பலியாவது இரு விகிதத்திலும் ஆண்களே அதிகம். இதற்கு காரணம், ஆண்கள் புகைப் பிடித்தல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் குறைந்த வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதோடு பெண்கள் இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ளனர். இந்த உயிரியல் நன்மைகள் இந்திய பெண்களுக்கு மட்டும் கைகொடுக்கவில்லை.

என்ன காரணம்?
பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் சுகாதார ஆய்வாளர் வில்லியம் ஜியோ கூறுகையில், ‘‘உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் உடல் நலம், பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை பெறுவதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மோசமாக உள்ளனர் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. எனவே, தொற்றுநோயை கையாள்வதில் பெண்களுக்கு பாதிப்பு குறைவு என அரசாங்கங்கள் ஒருபோதும் எண்ணி விடக் கூடாது. அதோடு, தொற்று சூழலிலும் கூட சுகாதார மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது,’’ என்றார்.

* உலக நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


Tags : countries ,women ,men ,India ,world , World countries, India, men, women, corona
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...