×

அமெரிக்காவில் பலி செப்டம்பருக்குள் 2 லட்சம் எட்டும்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்துக்குள் இரண்டு லட்சத்தை எட்டும் என்று புகழ்பெற்ற இந்திய வம்சாவளி பேராசிரியர் ஆசிஷ் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வின் அடிப்படையில் கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். 1,12,900 பேர் வரை இறந்துள்ளனர். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 1000 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பேராசிரியருமான ஆசிஷ் ஜா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்களுக்கு இறப்பு எண்ணிக்கை சமநிலையில் இருந்தால் கூட செப்டம்பர் இறுதிக்குள் பலி எண்ணிக்கை 2 லட்சமாக உயரும். இனி வரும் கோடையில் இது குறையும் என்று எதிர்பார்த்தாலும் கூட, நிலைமை இன்னும் மோசமடைந்து, பலி எண்ணிக்கை உயரக் கூடும்.

நாளொன்றுக்கு 800ல் இருந்து 1000 பேர் வரை உயிர் இழக்கின்றனர். அதன் அடிப்படையில் கணக்கெடுத்தால் மாதத்துக்கு 25,000 பேர் பலியாவார்கள். மூன்றரை மாதங்கள் என்று கணக்கிட்டால் 88,000 பேர் இறக்கக் கூடும். செப்டம்பர் இறுதிக்குள் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா 2 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவலின் மையமாக விளங்கிய நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகெட், மசாசூசெட்ஸ் ஆகிய பகுதிகளில் பாதிப்பு குறையத் தொடங்கி இருந்தாலும், அரிசோனா, புளோரிடா, டெக்சாஸ், வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதிகளில் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் பரவத் தொடங்கி உள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தனிமைப்படுத்தி கொள்ளுதல், வீட்டிலேயே இருத்தல் உள்ளிட்ட விதிகளை மக்கள் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை குறைக்கலாம். வெளியில் செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். இதனை பின்பற்றா விட்டால், செப்டம்பருக்குள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 25,000 பேர் வரை இறக்க கூடும். இதனால் இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் மத சுதந்திரம் அமெரிக்கா கண்காணிப்பு
கடந்த 2019ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் பற்றிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார். இது குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதர் சாமுவேல் பிரவுன்பேக் கூறுகையில், ``இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளித்து, சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளும் இந்தியாவில் மதம், இனம், சமூக கலவரங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவின் மத சுதந்திரம் மீது அமெரிக்கா மிகவும் அக்கறை கொண்டுள்ளது,’’ என்றார்.


Tags : US , USA, Corona, dies
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது