×

நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை செலுத்தாததால் முன்கூட்டியே சசிகலா விடுதலையாக வாய்ப்பில்லை: கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை செலுத்தாதது உள்பட சில காரணங்களால் முன் கூட்டியே விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யவில்லை என கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை குற்றவாளியாக நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் நான்கு பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 ேகாடி, மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த 2017 பிப்ரவரி 12ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அதை தொடர்ந்து வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வரும் 2021 பிப்ரவரி மாதம் முடிகிறது. இதனிடையே, நன்னடத்தை, விடுமுறை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து சசிகலா உள்பட மூன்று பேரும் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதற்கு மாநில சிறை துறை அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகை செலுத்தாமல் இருப்பதும் தவறாகும். நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை சசிகலா செலுத்தாமல் உள்ளது உள்பட பல காரணங்களால் அவர் முன் கூட்டியே விடுதலை செய்யும் தேதி தீர்மானிக்கவில்லை என்று பதில் கொடுத்துள்ளது. இதன் மூலம் சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆவது தொடர்பான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Sasikala ,court , Court, Fines, Sasikala, Karnataka Prison
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது