×

‘வடிவேலுவை கடித்த நாய்கள் செத்ததை போல கொரோனா நம்மைக்கண்டு ஓடும்’: அமைச்சர் செல்லூர் ராஜூ ‘லகலக... லகலக’

மதுரை: சினிமாவில் நடிகர் வடிவேலுவைக் கடித்த நாய்கள் செத்ததைப்போல, கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி கலகலப்பு ஊட்டினார். மதுரையில் நேற்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வது வருத்தமளிக்கிறது. ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அங்குள்ள தெய்வங்கள் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டவனுக்கு இணையானவர்கள் மருத்துவர்கள். அதனால் ஆண்டவனே, ‘என்னை வணங்க வேண்டாம், மருத்துவர்களை வணங்குங்கள்’ என்றே கூறுவார். அனைவருக்குமே ஆண்டவன் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையிலேயே கொடுத்திருப்பதால், கொரோனா நம்மை அண்டவே அண்டாது.

ஒரு சினிமாவில் வடிவேலுவை சுற்றி 10, 15 நாய்கள் இருக்கும். அந்த நாய்களை பார்த்து வடிவேலு, ‘கடிக்காதீங்க... கடிக்காதீங்க...’ என்று சொல்வார். மீண்டும், மீண்டும் அதை சொல்லிக்கொண்டே இருக்கும்போது, நாய்கள் கடித்துக் குதறும். பின்னர் அடுத்த காட்சியில், நாய்கள் அனைத்தும் செத்துக் கிடக்கும். ஆனால், வடிவேலு அப்படியே இருப்பார். அப்போது சொல்வார், ‘நான்தான் சொன்னேனே கேட்டீங்களா’ என்பார். அதுபோல இந்த கொரோனாவை  நாம் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘23 மாவட்டங்களில் 374 கூட்டுறவு வங்கிகளில் சிறுவணிக கடன் வழங்கப்படும். அதற்கு பக்கத்து கடைக்காரரின் ஜாமீன் மட்டும் போதும்’’ என்றார்.

Tags : Selur Raju ,Corona ,Us Vadivelu , Minister Selur Raju, Corona
× RELATED அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம்...