×

கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடங்கியது விவசாயத்திற்கு மவுசு; தூசு தட்டப்படும் விளைநிலங்கள்

* l மாதம் பல லட்சம் சம்பளம் வாங்கியவர்களே களத்தில் இறங்கினர்
* சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு
* அதிக செலவு செய்து தொழில் செய்ய முடியாது. விவசாயம் செய்யலாம் என்று களத்தில் இறங்கி விட்டோம். விவசாயம் எங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எக்காரணம் கொண்டும் விவசாயத்தை விட்டு செல்ல மாட்டோம்.

சென்னை: கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில்களும் முடங்கி போய் உள்ளது. வேலைவாய்ப்பை இழந்தவர்கள், வருமானம் இழந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அனைவரும் தற்போது விவசாயம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், மீண்டும் விவசாயத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. மாதம் பல லட்சம் சம்பளம் வாங்கியவர்களே விவசாயத்தில் இறங்கியுள்ளனர். கொரோனாவால்கொடிகட்டி பறந்த அனைத்து தொழில்களுமே முடங்கிப்போய் உள்ளதால், இந்த தொழில்கள் மீண்டும் எழுச்சியை சந்திக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து பரிதவித்து வருகின்றனர். இவ்வளவு நாட்கள் குடும்பத்தை மறந்து ெவளிநாடுகளில் வேலை பார்த்து வந்தவர்கள் கூட தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். நிதி நெருக்கடியை சமாளிக்க பல நிறுவனங்களில் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பழையபடி சம்பளம் கொடுப்பதில்லை.மாறாக சம்பளத்தை பெரும்பாலும் குறைத்து விட்டனர். பலருக்கு மாதக்கணக்கில் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆட்கள் குறைப்பு போன்ற நடடிக்கைகளில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கி வருகின்றன. இதனால் கை நிறைய சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு முடிந்தாலும் பழையபடி வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. பழைய நிலைமை திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இதனால், செலவை சமாளிக்க முடியாமல் நகரங்களில் வாழும் தங்களது மனைவி, குழந்தைகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். செலவை குறைத்து கொண்டு தனி ஒரு மனிதனாக இருந்து சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அந்த தொழிலும் வரும் காலங்களில் நிலைக்குமா என்பது ஒரு பக்கம் பலருக்கு கவலையாக இருந்து வருகிறது. இதனால், வேலைவாய்ப்ைப இழந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர்கள் தற்போது ஒரு புது முடிவை எடுக்க தொடங்கியுள்ளனர். “கூழோ, கஞ்சியோ அது சொந்த உழைப்பால்தான் இனி இருக்க வேண்டும்.

அடுத்தவர் கையை நம்பி இனி வாழ்க்கை நடத்த கூடாது” என்று நினைக்க தொடங்கியுள்ளனர். ேவறு தொழிலில் அதிக முதலீடு செய்ய அவர்களுக்கு மனம் இல்லை. அதற்கு ஒரே வழி அதிகம் செலவு இல்லாத விவசாயத்தில் இறங்க ஒவ்வொருவரும் முடிவு ெசய்து விட்டனர். இதனால், பலர் தங்களது சொந்த ஊரில் உள்ள விவசாய நிலங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பலர் தங்களது தந்தை, உறவினர்கள் செய்த விவசாய தொழிலை செய்ய தொடங்கியுள்ளனர். தரிசாக கிடந்த நிலத்தையும் தூசு தட்டி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதில் நெல், வாழை, சோளம், கம்பு உள்ளிட்ட போன்றவற்றை பயிரிட முடிவு செய்துள்ளனர். அனுபவம் இல்லா விட்டால் என்ன, அனுபவம் உள்ளவர்களிடம் அனுபவத்தை கேட்டு அந்த பணியில் இறங்கியுள்ளனர். மேலும் பலரும் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். விவசாயம் செய்து கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்த முடிவு செய்துவிட்டனர்.

ஒரு காலத்தில் வயலில் இறங்கி வேலை பார்த்தால் கேவலம் என்று நினைத்து பட்டணம், வெளிநாடு போய் காசு சம்பாதித்தனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய நிலங்கள் அனைத்தும் பிளாட் போட்டு விற்கப்பட்டன. இருந்த குறைவான நிலத்தில்தான் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடங்கி போனது. ஆனால் விவசாயம் ைககொடுத்தது. எவ்வளோ அறிவுரை கூறியும் விவசாயம் செய்ய மாட்டேன் என்றவர்களுக்கு கொரோனா என்ற வைரஸ் பாடத்தை கற்று கொடுத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில் விவசாய நிலத்தில் கை வைத்தால் தான் வாழ்க்கை என்பதை பலர் நினைக்க ெதாடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயத்தின் பக்கம் திரும்பியவர்கள் கூறுகையில், “ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகரம் பக்கம் போனோம். ஆனால், இந்த வேலை நிரந்தரம் இல்லை என்பதை கொரோனாவின் தாக்கம் கற்றுக் கொடுத்து விட்டது. இனிமேல் வாழ்வோ, சாவோ அது சொந்த ஊரில்தான் என்று திரும்பியுள்ளோம். இனிமேல் அதிக செலவு செய்து தொழில் செய்ய முடியாது. விவசாயம் செய்யலாம் என்று களத்தில் இறங்கி விட்டோம். விவசாயம் எங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எக்காரணம் கொண்டும் விவசாயத்தை விட்டு செல்ல மாட்டோம். விவசாயத்தில் புதுமையை உருவாக்குவோம்” என்றனர்.

Tags : Corona ,Mouse for Agriculture , Corona, all industries, agriculture, farms
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...