×

பெரும் தாடி, குறும் தாடி, கறும் தாடி, வெண் தாடி....தெருவெல்லாம் திருவள்ளுவர்கள்!: கொரோனா பீதியால் சலூன் பக்கம் தலைகாட்ட மறுத்து முடிஅடர்ந்து திரியும் கூட்டம்

சென்னை: திடீரென பார்க்கும் இடமெல்லாம் தாடிவாலாக்களாக திரிகிறார்கள்.  எல்லாம் கொரோனா படுத்தும் பாடுதான். கொரோனா ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டு விட்டது. எல்லா தொழிலும் படுத்துவிட்டது. இதில் அதிகம் அடிவாங்கியது சலூன்கள் தான். முகத்தை தொடுவதன் மூலம்தான் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவுகிறது. சலூன்களின் வேலையே முகத்தையும தலையையும் தொட்டு செய்வது தான். இதனால் ஊரடங்கு தளர்வில் மற்ற கடைகள் எல்லாம் திறக்கப்பட்டபோதும் சலூன், பியூட்டி பார்லர்களுக்கு மட்டும் தடை நீடித்தது. பின்னர் படிப்படியாகத்தான் திறக்கப்பட்டது. முதலில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் கிராமங்களில் திறக்க அனுமதி தரப்பட்டது. பிறகு நகர்ப்பகுதி கடைகள் திறக்கப்பட்டன. கடைசியாகத்தான் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட 2 மாதம் பூட்டிக் கிடந்த சலூன் கடைகள் எல்லாம் உற்சாகமாக திறக்கப்பட்டன. ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. கடையை திறந்து வைத்து காத்துக் கிடக்கிறார்கள். வாடிக்கையாளர்களைத்தான் காணோம்.

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் சலூன் கடைகள் களைகட்டும். டிசைன், டிசைன் கட்டிங்கில் அசத்துவார்கள். பிரபல நடிகர்களின் பாணியில் தாடியை டிரிம் செய்வார்கள். பலவித வடிவங்களில் அழகூட்டுவார்கள். இதில் புள்ளீங்கோ ஹேர் ஸ்டைல் தனித்துவம் வாய்ந்தது. மார்ச் 24ல் ஊரடங்கு வந்தாலும் வந்தது. இந்த கோலாகலத்துக்கு எல்லாம் வேட்டு வைக்கப்பட்டது. இதனால் முடிவெட்ட முடியாமல், ஷேவிங், டிரிம்மிங் செய்ய முடியாமல் பலர் தவித்துப் போயினர். கடைசியில் சொந்தமாக செய்யத் தொடங்கிவிட்டனர். யூடியூப்களை பார்த்து தனக்குத்தானே முடியை வெட்டிக்கொண்டனர். ஷெல்ப் ஷேவிங் பழக்கம் இல்லாதவர்கள் தாடியை வளர்க்கத் தொடங்கினர். இன்னும் பலர் தினமும் ஷேவ் செய்வதற்கு பதில், ‘அதுபாட்டுக்கு வளந்துட்டு போகட்டும்..அப்புறம் பாத்துக்கலாம்..’ என விட்டுவிட்டனர்.

இப்போது தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் திறக்கப்பட்ட பின்னரும் அங்கு போவதற்கு பெரும்பாலானோர் தயாராக இல்லை. இத்தனைக்கும், ‘ஷேவிங் கிடையாது, மழிக்கப்பட்ட முடிகளை பையில் போட்டு நீங்களே எடுத்துக்கொண்டு போக வேண்டும்’ என்று கேரளா விதித்தது போன்ற கறார் கன்டிஷன்களை எல்லாம் தமிழக சலூன் கடைகள் போடவில்லை. இருந்தும் கூட்டம் இல்லை. ஆதார் கட்டாயம் என்று அரசு சொன்னதுதான் கொஞ்சம் தடையாகப் போனது. ஆனால், வாடிக்கையாளர்கள் வராததற்கு முக்கிய காரணம் கொரோனா குறித்த பயம்தான். நாளுக்குநாள் படுவேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளை பார்த்து பலர், ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என தயங்குகிறார்கள். அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களையும் கடைகளில் செய்துள்ளோம். இந்த போக்கு நீடித்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் என சலூன் கடைக்காரர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த புதிய போக்கினால் எல்லோரும் இப்போது தாடி வளர்ப்பவர்கள் ஆகிவிட்டார்கள். இதுவரை கிளீன் ஷேவ் செய்து அமுல் பேபி முகத்துடன் இருந்தவர்கள் எல்லாம் இப்போது முரட்டுத் தாடியுடன் கெட்டப்பை மாற்றிவிட்டார்கள். இந்த நிலை நீடித்தால் மார்பில் தவழத்தவழ அலைபுரளும் தாடியுடன் தெருவெங்கும் திருவள்ளுவர் தோற்றத்தில் நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.

Tags : street , Big Beard, Short Beard, Black Beard, White Beard, Thiruvalluvar, Corona Panic
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...