×

அரிசி, மளிகை, காய்கறிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியில் மளிகை, காய்கறிகளை வாங்கி குவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பேருந்து, ஆட்டோ போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரம் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கடந்த 8ம் தேதியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல தளர்வுகள் ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியதாகவே காட்சி அளிக்கிறது. தற்போது, வழிபாட்டு தலங்கள், நீச்சல் குளங்கள், மதுபான பார், ஷாப்பிங் மால், மின்சார ரயில் போக்குவரத்துக்கு மட்டுமே இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் திணறி வருகிறார்கள். இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வருகிற 15ம் தேதி (திங்கள்) முதல் 30ம் தேதி வரை 16 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் கடந்த சில நாட்களாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தி, நேற்று காட்டுத்தீ போல அதிகளவில் பரவியது.  இதனால், பயந்துபோன பொதுமக்கள் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் கூட திறக்கப்படாது என்று கருதினர். இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்தனர். இந்நிலையில் ‘சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தனியாக முழு ஊரடங்கு எதுவும் அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்தனர்.


Tags : Rice, groceries, vegetables
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...