×

குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்: முதல்வர் அறிக்கை

சென்னை: குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் எனவே குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு முறையான கல்வியினையும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து அக்குழந்தைகள் கல்வி கற்கவும், விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு கல்விக் காலம் முழுமைக்கும் 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும், 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தினை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி, குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. ‘குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்’ என்பதை உணர்ந்து, குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : country ,CM , Children, Income, CM
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...