×

புழல் சிறையில் கைதிகள் மீது தாக்குதல்

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் மீது நேற்று முன்தினம் இரவு கொடூர தாக்குதலை சிறைத்துறை காவலர்கள் நடத்தியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.  புழல் சிறையில் உள்ள 55க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உரிய சிகிச்சையும்,  மற்ற கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.  இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மற்ற சிறைகளில் இருந்து புழல் சிறைக்கு வந்த, 50-க்கும் மேற்பட்டோரை, கொரோனா பாதித்தோர் இருக்கும் பகுதியில் தங்க வைத்துள்ளனர். இதனால் சிறைக்குள் பிரச்சினை வெடித்தது. சிறை வார்டனிடம் இது பற்றி தேர்வு எழுத வந்த கைதிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தண்டனைச் சிறையில் இருக்கும் 700-க்கும் மேற்பட்ட கைதிகள், புழல் சிறைக்கு வந்த பிற சிறைவாசிகளுக்கு ஆதரவாக சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சிறையில் ஏற்பட்ட அசாதாரண சூழலால், 100-க்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு, கைதிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்மூடித்தனமான தாக்குதலில் கைதிகள் 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  700-க்கும் மேற்பட்டோர் உள்ள தண்டனை சிறைப் பிரிவில், 120 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 55 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள கைதிகள் பரிசோதிக்கப்படாமலேயே உள்ளதாகவும் தெரிகிறது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கைதிகள் அச்சத்தில் உள்ளனர்.


Tags : Prisoners of Pulp Jail ,Puzhal Jail of Prisoners , Attack , Prisoners , Puzhal Jail
× RELATED செக்யூரிட்டி மீது கல்வீசி தாக்குதல்