×

சில்லி பாயின்ட்

1. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடிதம் அனுப்பியுள்ளார். ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேலும் வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய ஸ்டேடியங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி நினைத்துப் பார்க்கவே மிகவும் வித்தியாசமாக உள்ளது என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
3. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் பந்தை பளபளப்பாக்க எச்சிலை உபயோகிக்கக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், பந்தின் பளபளப்பை நீட்டிக்கும் வழிமுறைகள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கூக்கபுரா நிறுவனம் இதற்காக பிரத்யேகமான மெழுகை உருவாக்கி உள்ளது. எனினும், தற்போதுள்ள கிரிக்கெட் விதிகளின்படி செயற்கைப் பொருட்களைக் கொண்டு பந்தை பளபளப்பாக்க அனுமதி இல்லை என்பதால் இந்த மெழுகை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

4. புதிய கல்விக்கொள்கையின் கீழ், பாடத்திட்டத்தில் விளையாட்டையும் ஒரு அங்கமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
5. விளையாடாமல் வீட்டில் முடங்கியுள்ள சமயத்தில் மன ரீதியாக வீரர்கள் உறுதியுடன் இருப்பது அவசியம் என்று வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
6. இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின்போது, நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் களத்தில் மண்டியிடுவது பற்றி விவாதித்து முடிவு செய்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
7. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது, ஆட்டத்தை டிவி நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக கையை தொடையில் தட்டி ஆர்ப்பரித்து கொண்டாடுவேன் என்று இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

8. டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து முடிவு செய்வதை ஐசிசி ஒத்திப்போட்டுள்ளது சரியான நடவடிக்கை தான். இது மிக மிக முக்கியமான விஷயம். இதில் அவசரப்படுவது தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
9. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதாக இருந்தால் அது முழுமையான ஒன்றாக இருக்க வேஎண்டும். போட்டிகளின் வடிவம் மற்றும் எண்ணிக்கையை எந்த வகையிலும் மாற்றக் கூடாது என்பதே அணி உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைமை செயலதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார்.

Tags : Sourav Ganguly ,BCCI , BCCI president Sourav Ganguly
× RELATED அணியின் நலனுக்காக புதிய...