×

பொதுத்துறை நிறுவனங்களிடம் ரூ4 லட்சம் கோடி ஏஜிஆர் நிலுவை கோரியதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: கெயில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிடம் எந்த அடிப்படையில் ஏஜிஆர் கட்டண நிலுவையை தொலைத்தொடர்பு துறை கோரியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், ஏஜிஆர் கட்டண நிலுவை தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும்.

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, வோடபோன், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் மொத்தம் ரூ1.47 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதற்கிடையில், கெயில் இந்தியா, பவர் கிரிட், ஆயில் இந்தியா, டெல்லி மெட்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண பாக்கியாக மொத்தம் ₹4 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து இந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

 இந்நிலையில், ஏஜிஆர் கட்டண வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ₹4 லட்சம் கோடி பாக்கி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே, உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஏஜிஆர் பாக்கி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

எந்த அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். என உத்தரவிட்டனர். மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் நிலுவையை எவ்வாறு செலுத்தப்போகின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதற்கிடையில், கட்டண பாக்கி செலுத்துவது தொடர்பாக வோடபோன் கூறுகையில், ‘‘ஊழியர்களுக்கு சம்பளம் தரக்கூட பணமில்லை’’ என தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம், 70 சதவீத பாக்கியை செலுத்தி விட்டதாக கூறியுள்ளது.



Tags : Supreme Court PSUs ,Supreme Court , PSUs, AGR balances, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...