×

வாழக்கொல்லை பகுதியில் சேதமடைந்த வீராணம் ஏரிக்கரை சாலையை சீரமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள புதிய வாழக்கொல்லை மதகு சென்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி உடைப்பு ஏற்பட்டு மண் அரிப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் உள்வாங்கியதால் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறத் தொடங்கியதையடுத்து வீராணம் ஏரிக்கரை சாலையில் பேருந்துகள் செல்லாமல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக உடைப்பை சரி செய்து பின்பு வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தபின் புதிய வாழக் கொல்லை மதகு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் சேதமடைந்த சாலையை பொதுப்பணித்துறையினர் சரி செய்யாமல் விட்டு விட்டனர். சேத்தியாத்தோப்பு - காட்டுமன்னார்கோவில் செல்லும் முக்கிய சாலை என்பதால் பேருந்துகளும் வாகனங்களும் ஏராளமான இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றனர்.

சேதமான சாலையை சீரமைக்காமல் விபத்து தடுப்புக்காக சாலையின் நடுவே பேரல்களை வைத்துள்ளனர். இதனை கவனிக்காத வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விடுவதால் தொடர்ந்து வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : erosion road ,area , Livelihood, damaged heroic lake
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி