×

கொரோனா எதிரொலியால் விற்பனையில்லை செடியிலேயே மாண்டுபோன செண்டு மல்லி: விவசாயிகள் வேதனை

கலவை:  கொரோனா எதிரொலியால் விற்பனையின்றி கலவை பகுதியில் பயிரிடப்பட்ட செண்டு மல்லி மலர்கள் செடியிலேயே காய்ந்து விட்டன. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழப்பந்தல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நெல், கரும்பு மற்றும் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர். இதில் முக்கியமானவை செண்டு பூக்கள். இப்பூக்கள் ஆரணி மற்றும் கலவை வாழப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.3 மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக பயிர் செய்யும் இந்தப் பூக்கள் தினமும் அதிகாலை நேரத்தில் பறிக்கப்பட்டு, நகர்ப்புற சந்தைகளில் மொத்த வியாபாரிகளுக்கு கிலோ ₹40க்கு  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை மொத்த வியாபாரிகள் வாங்கி கிலோ‌‌ ₹60 முதல் ₹70 வரை சில்லரை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து கடைகள் மற்றும் மொத்த மார்க்கெட்டுகள், சந்தைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்காததால் பூ விற்பனை பாதிக்கப்பட்டது. இதில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் குறைந்த உறவினர்களுடன் நடந்தது.

இதனால் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலத்தில் விளைந்த பூக்களை வாங்க மொத்த வியாபாரிகள் வராததால் செடியில் உள்ள பூக்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், ‘எனது நிலத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் செண்டு மலர் பயிரிட்டு இருந்தேன். கோடை காலத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலும், பல்வேறு சிரமங்களுக்கு இடையே உரிய நேரத்தில்  நீர்பாய்ச்சி பராமரிப்பு செய்து வந்தேன். கொரோனா காரணமாக பூக்களைப் பறிக்க ஆட்கள் வரவில்லை. பறித்த பூக்களை வாங்கி செல்ல வியாபாரிகளும் வரவில்லை. வெளியூருக்கு கொண்டு செல்லவும் வாகன வசதி இல்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்களை கொண்டு  பறிக்கும் பூக்களை உள்ளூரிலேயே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது.இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பிறகு பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டோம். மேலும் போதிய தண்ணீர் இல்லாததால் செடிகளும் காய்ந்து போனது. இதனால் ₹1 லட்சம் மதிப்புள்ள பூக்களுக்கு ₹6 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. இது எங்களுக்கு  பெரிய அளவிலான நஷ்டம். எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : peasants , Growth,coriander seed, Corrosion ,peasants
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...