×

பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் அவலம் மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தால் பயணிகள் பரிதவிப்பு

* போக்குவரத்தை அடுத்த மண்டலத்திற்கும் விரிவுப்படுத்த கோரிக்கை

 சிதம்பரம்:  மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தால் பல பேருந்துகள் மாறி, மாறி செல்வதுடன், பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டியதிருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே போக்குவரத்தை அடுத்த மண்டலத்திற்கு விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து துவங்கியது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மண்டலத்தில் பொதுப் போக்குவரத்து துவங்கவில்லை. மற்ற 6 மண்டலங்களிலும் போக்குவரத்து துவங்கி நடந்து வருகிறது. நேற்று முதல் தனியார் பேருந்துகளும் ஓடத் துவங்கி உள்ளதால் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தால் பயணிகள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் பல பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மண்டலத்தின் எல்லைகளிலும் இறங்கி பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அடுத்த மண்டலத்தின் எல்லையில் பேருந்துகளை பிடித்து செல்வதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 இப்படி பயணிப்பதால் லக்கேஜ் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வது பயணிகளுக்கு சிரமமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லும் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்ற பலரும் மண்டலங்களுக்கு இடையே மட்டுமான போக்குவரத்தால் தினமும் அல்லல்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பணம், காலநேரம் உள்ளிட்ட அனைத்தும் விரயமாவதுடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.  கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்கள் ஒரு மண்டலங்களாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஒருவர் அடுத்த மண்டலமாக உள்ள நாகை மாவட்டம் உள்ள  மண்டலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் சிதம்பரத்தில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து கொள்ளிடம் வரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி வல்லம்படுகை வரை செல்ல வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கொள்ளிடம் நகரில் உள்ள அடுத்த மண்டலத்துக்கு பேருந்துகளில் ஏறி பயணிக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

இவ்வாறு தினசரி சிதம்பரத்தில் இருந்து செல்லும் ஏராளமான பயணிகளுக்காக வல்லம்படுகை வரை பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பயணிகளின் நலன் கருதி அந்த பேருந்துகளை கொள்ளிடம் வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டல எல்லைகளுக்கு இடையே பொதுமக்கள் நடந்து செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வல்லம்படுகையிலிருந்து கொள்ளிடம் கடைவீதி வரை ஆட்டோக்கள் சவாரிகளை கட்டி உள்ளது. நடந்து செல்ல முடியாதவர்கள் இந்த ஆட்டோக்களில் ஏறி செல்கின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டலங்களுக்குள் நடந்து வரும் போக்குவரத்தை அடுத்த  மண்டலத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அருகருகே உள்ள மண்டலங்களை இணைக்க பயணிகள் கோரிக்கை
அருகருகே உள்ள மண்டலங்களை போக்குவரத்திற்காக இணைத்தால் பல லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவர். தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் இல்லாத நிலையில், மண்டலங்களை இணைத்து பஸ் போக்குவரத்துக்கு அனுமதித்தால் மட்டுமே  பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்கள் அடங்கிய மண்டலங்களை கணக்கெடுத்து அவற்றை இணைத்து பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்தில் சென்றால் மட்டும்தான் நோய்த்தொற்று ஏற்படுமா?
 மண்டலங்களுக்கு இடையே மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், அடுத்த மண்டலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ- பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த விதி பேருந்துகளுக்கு மட்டும் தான் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மட்டுமே ஒரு மண்டலத்தில் இருந்து அடுத்த மண்டலத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சாரை சாரையாக எவ்வித அனுமதி சீட்டுமின்றி அணிவகுத்து செல்கின்றது. தொற்று பரவும் என அரசு கருதிதான் மண்டலங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்று பரவாதா என்ற கேள்வியை பயணிகள் முன் வைக்கின்றனர்.

Tags : Travelers , Travelers travel ,inter-city traffic, several kilometers
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை