×

புயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க திட்டமுள்ளதா?: தமிழக அரசு நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...!

சென்னை: சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க திட்டம் உள்ளதா என்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதி முதல்  நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும், 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும்  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றை  கட்டுப்படுத்துவது குறித்து முறையாக திட்டமிடாததால் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 21,000-க்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் வடசென்னையில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மக்கள் நெருக்கமே காரணம் எனக் கூறி வரும் அதிகாரிகள் கடைவீதிகள், சந்தைகளில் காணப்படும் நெரிசலை காரணம் என்று  கூறுகின்றனர். அதைப்போன்று சமூக விலகல், முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதின் மூலம் சென்னையின்  மற்ற இடங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே முறையான முன்அறிவிப்பு செய்து அதன் பிறகு 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சில கேள்விகள் எழுப்பினர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த  உத்தரவிடக்கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai ,Corona , Corona impact increasing in storm speed; Plan to extend curfew in Chennai?
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...