×

கொரோனாவால் திருவண்ணாமலை கோயில் மூடல் மற்றும் கிரிவலம் தடையால் 400 லாட்ஜ்களில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பரிதவிப்பு

* ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு
* சிறு வியாபாரிகள் தொழிலும் முடக்கம்

திருவண்ணாமலை: கொரோனாவால் திருவண்ணாமலை கோயில், மூடல் கிரிவலம் தடையால் 400 லாட்ஜ்களில் ₹10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வியாபாரிகள் தொழிலும் முற்றுலுமாக முடங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. அன்றாட கூலித்தொழிலாளர்கள் முதல் பன்னாட்டு வணிகர்கள் வரை தொழில் அச்சத்திலும், உயிர் பயத்திலும் நடுங்கியுள்ளனர். கொேரானாவின் கோரப் பிடியில் இருந்து விரைவில் தப்பித்தாலும், முடங்கிய தொழில்களும், இழந்த வேலை வாய்ப்புகளும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் அனைத்துத்தரப்பிலும் உள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொேரானா பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் நடத்தப்படும் பரிசோதனையில், இவ்வளவு நபர்களுக்கு பாதிப்பு உறுதியாகும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தால் பாதிப்பு பன்மடங்கு வெளியில் தெரியும் என்பது உறுதி.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500யை கடந்துவிட்டது. இந்த எண்ணிக்கை இந்த மாத இறுதியில் இருமடங்காகும் என்று அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருக்கிறது. உயிர் பயத்துடன் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர். இந்நிலையில், வெளியூர் ஆன்மிக சுற்றுலா பயணிகளின் வருகையை மட்டுமே நம்பியிருந்த திருவண்ணாமலை நகரின் தொழில்கள் அனைத்தும் முடங்கிவிட்டது. திருவண்ணாமலையில் பிரதான தொழில் வளம் இல்லை. தொழிற்சாலைகள் இல்ைல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இல்லை.

பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில், பவுர்ணமி கிரிவலம், புகழ்மிக்க ஆசிரமங்கள் போன்றவற்றை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்களை நம்பியே இங்குள்ள சாலையோர வியாபாரம் முதல் வணிக வளாகம் வரை நடக்கிறது.
தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் அக்னி ஸ்தலம் அமைந்த ஆன்மிக நகரம் என்பதால், பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வருவது உண்டு.அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், உணவகத்துடன் இணைந்த லாட்ஜ்கள், தங்கும் அறைகள், வாடகை குடில்கள் இயங்குகின்றன. இது தவிர, பவுர்ணமி நாட்களில் மட்டும் அறை வாடகை விடும் கெஸ்ட் அவுஸ்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வரையில் பணிபுரிந்து வந்தனர். அதேபோல், நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் அனைத்தும் வெளியூர் பக்தர்களின் வருகையை நம்பியே இயங்கி வந்தது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் இறுதியில், கொரோனா அச்சத்தால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மூடப்பட்டது. கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி, உள்ளூர் பக்தர்களும் கிரிவலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆன்மிக நகரில் கோயில் மூடல், கிரிவலம் தடை போன்றவற்றால் 400 லாட்ஜ்கள் மூடப்பட்டது. இதனால் ₹10 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாட்ஜ்கள் மூடல் எதிரொலியாக 5 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு வியாபாரிகளின் தொழிலும் முற்றிலும் முடங்கியுள்ளது.  கொரோனாவால் வேலைவாய்ப்பு இன்றி பரிதவிப்புக்குள்ளாகியுள்ள லாட்ஜ்கள், ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* இழந்த வேலை வாய்ப்புகளும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் அனைத்துத்தரப்பிலும் உள்ளது.
* அன்றாட கூலித்தொழிலாளர்கள் முதல் பன்னாட்டு வணிகர்கள் வரை தொழில் அச்சத்திலும், உயிர் பயத்திலும் நடுங்கியுள்ளனர்.
* திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருக்கிறது. உயிர் பயத்துடன் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர்.
* தொழிலாளர்களுக்கு, நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : Lodges ,Corona ,Thiruvannamalai Temple ,Kirivalam Block , Thousands , workers , 400 Lodges pounding Thiruvannamalai temple, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...