கடவுள் பூமியில் குறைகிறதா கருணை உள்ளம்? பெற்ற மகள்கள் கைவிட்டதால் தேவாலயத்தில் மூதாட்டி தஞ்சம்

* மீட்டு குமுளி சுகாதார நிலையத்தில் ஒப்படைப்பு

* உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரிதவிப்பு

கூடலூர்: பெற்ற மகள்கள் கைவிட்டதால் தேவாலயத்தில் தஞ்சமடைந்த மூதாட்டியை, போலீசார் மீட்டு குமுளி சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். கேரளாவிலிருந்து வந்த இந்த மூதாட்டி, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரிதவித்து வருகிறார். கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் குருவில்லா. தமிழக பொதுப்பணித்துறை ஊழியராக பணியாற்றிய இவர், கடந்த 1981ல் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரது மனைவி பிலோமினா (80). கணவர் உயிரிழந்த பின், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்காவில் வேலை செய்துள்ளார். பின் பெரியகுளத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு லக்சி, ப்ரின்ஸி என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி லக்சி, கேரள மாநிலம், திரூர் பகுதியிலும், பிரின்சி கொச்சியிலும் வசித்து வருகின்றனர்.பெரியகுளத்தில் இருந்த பிலோமினா 3 மாதங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள மகள் பிரின்சி வீட்டிற்கு சென்றுள்ளார். தாயின் கால்களில் புண் இருப்பதை கண்ட மகள், அவரது கையில் ரூ.500 கொடுத்து, கார் மூலம் கோட்டயம் மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு கொண்டு சென்று விட்டு விட்டு, குணமான பின் வருமாறு கூறிச் சென்றுள்ளார். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த பிலோமினா, பின் மகளின் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் பெரியகுளத்தில் உள்ள தன் வீட்டிற்கு செல்ல குமுளி வரை வந்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முடியாத நிலையினால், குமுளியில் உள்ள ஒரு தேவாலய வாசலில் தங்கினார்.

நேற்று முன்தினம் உடல் நலம் குன்றிய நிலையில் தேவாலய வாசலில் படுத்திருந்த இவரை கண்ட தேவாலய ஊழியர்கள், பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து முதாட்டியை மீட்டு குமுளி சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் குமுளி போலீசார், மூதாட்டி பிலோமினாவிடம் விசாரித்தபோது, வயதான காலத்தில் பெற்ற மகள்களை நம்பி வந்ததாகவும், அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால், சொந்த ஊருக்கே திரும்ப முயன்றதாகவும் கூறி உள்ளார்.இவரிடம் மகள்களின் தொலைபேசி, முகவரி போன்றவை இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி குறித்தும் அவர்களது மகள்கள் குறித்தும் கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில், யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நேரத்தில், பெற்ற தாயை மகள்களே பரிதவிக்க விட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories:

>