×

கொந்தகையில் அகழாய்வின்போது கிடைத்த முதுமக்கள் தாழி விபரங்கள் வரைபடங்களாக தயாரிப்பு : தொல்லியல் துறை தீவிரம்

திருப்புவனம்: கீழடி அகழாய்வின்போது கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் குறித்த வரைபட தயாரிப்பு பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்.19ம் தேதி ரூ.40 லட்சம் செலவில் துவங்கியது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தொடர்ச்சியாக முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. வெவ்வேறு அளவுகளில் கிடைத்து வரும் முதுமக்கள் தாழிகள் குறித்த அறிக்கை தயாரிக்க தொல்லியல் துறை முடிவு செய்து பணிகள் மேற்கொண்டு வருகிறது.

சுரேஷ் என்பவரது நிலத்தில் கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் இதுவரை 5 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த எலும்புகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்விற்காக எடுத்து சென்றுள்ளனர். முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடம், ஆழம் குறித்து வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் முதுமக்கள் தாழிகளின் உயரம், அகலம், எலும்புகளின் எண்ணிக்கை, அதன் எடை, நீளம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வரைபடங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. தினசரி தயாரிக்கப்படும் வரைபடங்கள் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் பெரும்பாலும் இரண்டு அடி முதல் மூன்றரை அடி உயரம் வரை உள்ளன. மற்ற இடங்களில் கிடைத்த தாழிகளும் கொந்தகையில் கிடைத்த தாழிகளும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : excavation ,Mt , Older fossils ,found, excavation , Mt.
× RELATED கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய...