×

கடையை திறந்தும் வாடிக்கையாளர்கள் தயக்கம் மீள முடியாத சரிவில் சலூன், அழகு நிலைய தொழில்கள்

* தமிழகம் முழுவதும் உள்ள சலூன் கடைகள் 3.5 லட்சம்
* வாழ்வாதாரம் இழந்து தொழிலாளர்கள் தவிப்பு
* 70 நாட்களில் ₹153 கோடி வருவாய் இழப்பு
* மேக்அப்பை விரும்பாத மாப்பிள்ளைகள் ஸ்பாக்களில் முன்பு திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளைகள் பேஷியல், பிளீச்சிங் இத்யாதிகளோடு மேக்அப் செய்துகொள்ள வருவார்கள். இதனால் முகூர்த்த நாட்களில் ஸ்பாக்கள் பிசியாக இருக்கும். தற்போது திருமணங்கள் எளிமையாக நடப்பதோடு, மாப்பிள்ளை - பெண் இருவரும் மாஸ்க் அணிந்துகொண்டு மணக்கோலத்தில் காட்சியளிப்பதால் மேக்அப்பை விரும்புவதில்லை. இதனால் மாப்பிள்ளைகள் ஸ்பாக்கள் பக்கமே
திரும்புவதில்லை.

கடைகள் காலியாகும் நிலை சலூன் கடைகள் பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில்தான் இயங்கி வருகின்றன. கடந்த 2 மாதத்திற்கு மேலாக கடைகள் மூடப்பட்டு எந்த வருமானமும் இன்றி தொழிலாளர்கள் தவிப்பதால் வாடகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. தற்போது கடைகளை திறந்தும் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் இந்த மாத வாடகையும் கேள்விக்குறிதான். இந்நிலையில் பல இடங்களில் கட்டிட உரிமையாளர்கள் வாடகை கேட்டு நச்சரிப்பதால் சிலர் கடைகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எத்தனையோ பேரிடர்களை சந்தித்து மீண்ட மக்களுக்கு, கொரோனா பெரும் சவாலாகி விட்டது. உயிரை பாதுகாத்துக் கொள்வதா, தொழிலில் கவனம் செலுத்துவதா என்று குழப்பம். பல நாட்கள் வருமானம் இன்றி முடங்கிக் கிடந்தவர்களுக்கு, வயிற்றுப் பிழைப்புக்காகவாவது வெளியே வந்தே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால்தான், ஊரடங்கு தளர்வின்போதெல்லாம் தங்களுக்கு அனுமதி கிடைக்காதா என பல்வேறு தொழில் துறைகள் ஏக்கத்துடன் காத்திருந்தன.
இதில், பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகுதான், சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு கடைசியாக அனுமதி வழங்கப்பட்டது.  ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பல தொழில்களை எந்த இயந்திரம் கொண்டும் தூக்கி நிறுத்த முடியாத நிலையில் உள்ளது. ஊரடங்கால் முடக்கம் கண்ட பல தொழில்கள், அரசு அறிவித்த தளர்வினால் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எதிலும் முன்பிருந்த உற்சாகம் துளியுமில்லை. பல தொழில்கள் அழியும் நிலைக்கே சென்றுவிட்டன.

ஊரடங்கால் இத்தகைய பரிதாப நிலைக்கு சென்றுவிட்ட தொழில்களில் சலூன் கடையும், அழகு நிலையங்களும்  அடங்கும். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த சலூன் மற்றும் அழகு நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளனவே தவிர, எதிர்பார்த்த பலன் இல்லை. அழகு நிலையம் மற்றும் சலூன் கடைகளுக்கு வருவோர் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசின் கட்டாய அறிவிப்பும், சலூன் கடைகளுக்கு வந்தால் கொரோனா பரவி விடுமோ என மக்கள் சிலரிடையே உள்ள தயக்கமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள் சலூன் கடைக்காரர்கள்.  நகரம், மாநகரம், கிராமம், குக்கிராமம் என எங்கும் இந்த நிலையே நீடிப்பதாக கூறும் அவர்கள், இப்படியே தொடர்ந்தால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.  ஆரம்பத்தில் சலூன் கடைகள் மூலம்தான்  கொரோனா பரவுகிறது என ஒரு வதந்தி உருவானது. இதனால் கைகளை  சுத்தமாக கழுவி விட்டு, மாஸ்க் அணிந்துதான் வேலை ெசய்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் கை கழுவுவதற்கும் வசதி செய்து கொடுக்கின்றனர். ஆனால் மக்கள்  முடிவெட்ட ஆர்வம் காட்டுவதில்லை. தலை மற்றும் முகத்தில் முடி அதிகரித்து  தற்போது பலர் சாலையில் சுற்றுகிறார்கள். இதில் ஒருசிலர், புதிய மிஷின்களை வாங்கி ெகாண்டு தனக்கு தானே முடி வெட்டிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் தொழிலுக்கான பொருட்கள்  வாங்கவே பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்க தலைவர் வியாசர்பாடி செல்வராஜன் கூறுகையில், தமிழகம் முழுக்க சுமார் 3 லட்சம் சலூன் கடைகளுக்கு மேல் உள்ளன. 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதை நம்பி வாழ்கிறார்கள். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் சலூன் கடைகளுக்கு மேல் உள்ளன. அரசு விதித்துள்ள நிபந்தனைகளால் கடை திறந்தும் பயன் இல்லை. முடிவெட்ட செல்போன் நம்பர், ஆதார் அட்டை கேட்க சொல்கிறார்கள். செல்போன் நம்பர் வாங்கி விடலாம். ஆதார் நம்பர் கேட்டால் வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.  ஏற்ெகனவே பல சேவைகளுக்கு ஆதார் கார்டு கேட்பதால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் நாங்கள் கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

லோஷன் நிறுவனம், பிளேடு நிறுவனம் எல்லாம் செல்ப் ஷேவிங் குறித்து விளம்பரம் செய்வதாலும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போதைய விதிமுறைகள் எங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்றார்.
 இதுகுறித்து புதுச்சேரி மாநில முடி திருத்துவோர் சங்க தலைவர் காசிநாதன் கூறியதாவது: புதுச்சேரியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. இந்த  தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் 5  பேர், 10 பேர் என இந்த தொழிலை நம்பி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். வேறு  தொழிலும் தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் முடிவெட்டும் தொழில்தான்.  இதில் தினமும் கிடைக்கும் ரூ.200, ரூ.300தான் அவர்கள் குடும்பத்தின் பசியை  ஆற்றுகிறது. கடந்த 10 நாட்களாக கடைகளை திறந்து இருந்தும் யாரும் வரவில்லை  என்றார். சலூன் கடை தான் இப்படி என்றால் அழகு நிலையங்களின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான ஸ்பாக்கள், அழகு நிலையங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களே அங்கு வருவதில்லை. அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளை அழகு நிலையங்கள் பின்பற்றுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க், கோட் என அனைத்தையும் கொடுக்கின்றனர். தற்போது முடி திருத்துதல் போன்ற ஒருசில சேவைகளை மட்டுமே செய்கின்றனர். பேசியல், மேக் அப் உள்ளிட்டவற்றை செய்வதில்லை. இதனால் அவர்களின் வருமானம் வெகுவாக பாதித்துள்ளது.

 புதுச்சேரியில் அழகு நிலையம் நடத்தி வரும் நிஷா சகாயராஜ் என்பவர் கூறுகையில், மருத்துவ தொழிலில் எந்த அளவுக்கு சுகாதார சூழல் கடைபிடிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அழகு நிலையத்திலும் கடைபிடிக்கிறோம். ஆனால் முன்பு போல பெண்கள் ஆர்வத்துடன் வருவதில்லை.  நாங்கள் பெரும்பாலும் வங்கிக்கடன் பெற்றுத்தான் இத்தொழிலை தொடங்கியிருக்கிறோம். இப்போதிருக்கும் சூழல் தொழிலாளர்களின் சம்பளம், வங்கிக்கடனுக்கான தவணை உள்ளிட்டவற்றுக்கு சிரமப்படும் நிலையை உருவாக்கியுள்ளது, என்கிறார். தமிழகத்தில் அதிகளவில் கொரோனா  பாதிப்பு இருப்பதால், புதுச்ேசரியில் உள்ள சலூன் கடைகளில் தமிழகத்தை  சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில்  பெரும்பாலும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு எந்த மறுப்பும் இன்றி  முடிவெட்டப்படுகிறது. சந்தேகப்படும்படி யாராவது வந்தால் ஆதார் கார்டு  காண்பிக்க சொல்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் பதிவெண்  கொண்ட வாகனங்களில் வரும் நபர்களுக்கு எந்த தயவு தாட்சண்யமும் இன்றி அனுமதி  மறுக்கப்படுகிறது. மொத்தத்தில், சலூன் மற்றும் அழகு நிலைய தொழில்களை நம்பியுள்ள பல லட்சம் பேரின் வாழ்க்கையை கடுமையாகவே பாதித்து விட்டது கொரோனா.

Tags : salon ,shop ,customers , salon , beauty industry ,doldrums , customers , reluctant , shop
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி