×

பள்ளி பருவத்திலேயே போராட்டத்தில் குதித்த அன்பழகன்

சென்னை: பள்ளி பருவத்திலேயே திமுக தலைவர் கலைஞருடன் சேர்ந்து மறியல் போராட்டம் நடத்தியவர் ஜெ.அன்பழகன். திமுக எம்எல்ஏ அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன். 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியில் தீவிரமாக பணியாற்றி கலைஞரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். தி.நகர் பகுதிச் செயலாளராக இருந்தார். 1976ம் ஆண்டு மிசா காலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் கலைஞருடன் சேர்ந்து, பள்ளி பருவத்திலேயே எழும்பூரில் இருந்த போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் மிசாவில் கைதானவர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பார்க்க கலைஞர் ஒவ்வொரு வாரமும் செல்வார். அப்போது அன்பழகனும், தனது தந்தை ஜெயராமனைப் பார்க்கச் செல்வார். அப்போது முதல் அன்பழகன் மீது கலைஞர் பாசமாக இருப்பார். 1985ம் ஆண்டு ஜெயராமன் மறைந்ததையொட்டி, தி.நகர் பகுதிச் செயலாளராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். 1995ம் ஆண்டு லண்டன் சென்று கல்லீரல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்து திரும்பினார். 2001ல் தி.நகர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் தெரிந்ததும் திமுக தலைவர் கலைஞர், எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார். 2011, 2016ம் ஆண்டு திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார். 15 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.  ஆதிபகவான், யாருடா மகேஷ் என்று 2 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதற்கு அதிமுகவும், அரசும் கடுமையாக இடைஞ்சல் கொடுத்தனர். அப்போது மாநிலம் முழுவதும் 300 தியேட்டர்களிலும் திரைப்படத்தை நானே வெளியிடத் தயார் என்று அறிவித்தார்.
2015ம் ஆண்டு சென்னை நகரை பெருவெள்ளம் சூழ்ந்தது. மக்கள் உணவு, உடை இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு பல கோடி ரூபாய் செலவில் நிவாரண உதவிகளை வழங்கினார். 2016ம் ஆண்டு வர்தா புயல் சென்னையை தாக்கியபோதும் மக்களுக்கு உதவிகளை வாரி வழங்கினார். கொரோனா காலத்திலும் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல், பொருட்களை வாரி வழங்கி வந்தார். தற்போது மக்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுத்துள்ளார்.
குடும்பம்:  அன்பழகனின் மனைவி சுந்தரி. மகன் ராஜா(40). மருமகள் சிவகாமி. பேத்தி ஓவியா, இனியா. மகள் கீதா(38). மருமகன் பாஸ்கர். அதில் அன்பழகன் தனது மகனுடன் வசித்து வந்தார்.

முதல் முறையாக கொரோனாவுக்கு எம்எல்ஏ பலி

நமது நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிர அமைச்சர்கள் அசோக் சவான், ஜிதேந்திர ஆவாத்,  முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கு எம்எல்ஏ ஒருவர் பலியாகி இருப்பது இதுதான் முதல் முறை.



Tags : school , Dear boy,jumped ,struggle, school year
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி