×

ஜெ. அன்பழகன் எம்எல்ஏ மறைவு கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: ஜெ. அன்பழகன் எம்எல்ஏ மறைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவு அதிர்ச்சியும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் இழப்பு தமிழக மக்களுக்கும், முக்கியமாக திமுகவிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி (முதல்வர்): உடல் நலம் பாதித்திருந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம் (துணை முதல்வர்): திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருவமான மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: திமுக இயக்க தூணின் வலுவான தலைவராக திகழ்ந்தவர் ஜெ.அன்பழகன். அவரது இழப்பு திமுகவுக்கும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. ஜெ.அன்பழகனின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): பாமக சமூகநீதி கொள்கைகளை பல நேரங்களில் வியந்து பேசியவர். அரசியல் கடந்த நட்பை பராமரித்து வந்தவர்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்):  இறுதி காலத்தில் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது.

திருநாவுக்கரசர் எம்.பி (முன்னாள் காங்கிரஸ் தலைவர்): தைரியமும், துணிச்சலும், அன்பும், கடின உழைப்பும் விசுவாசமும் நிறைந்த அவரது மறைவு திமுகவுக்கும், குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு பேரிழப்பாகும்.
 
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கண பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தம தொண்டன். திமுக தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தை பெற்றுவிட்டார்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கொரோனாவின் கொடிய தொற்றுக்கு பலியாகியுள்ளார். அவரது மறைவு வேதனை அளிக்கின்றது.

தமாகா தலைவர் ஜி.ேக.வாசன்: பொதுமக்களுக்கும், அவர் இயக்க நண்பர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் திறம்பட பணியாற்றியவர். இயக்கத்தினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்: ஜெ.அன்பழகன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. இதிலிருந்து மீள அவர்தம் குடும்பத்தினருக்கு அமைதியையும், தைரியத்தையும் அருள இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நிவாரண பணிகளை வழங்கிய அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது என்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எளியோருக்கு உதவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஜெ.அன்பழகனுக்கு எப்படியோ கொரோனா தொற்றியுள்ளது. அவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பாகும்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர், அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்) நடிகர்கள் சரத்குமார் உள்ளிட்ட பலரும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தயாநிதி மாறன் இரங்கல்

ஆருயிர்த் தலைவர் கலைஞரின் அன்பிற்குப் பாத்திரமானவர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றவர், கடைசி மூச்சு வரை கழகமே தனது உயிர் மூச்செனக் கொண்டு செயலாற்றியவர், ஜெ.அன்பழகன். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியையே இன்னமும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவரது இழப்பை எப்படித் தாங்கிட இயலும்  என்று தனது இரங்கல் செய்தியில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

Tags : Governor ,J. MLA ,leaders ,party ,Chief Minister , J. MLA condolences Governor, Chief Minister,political party leaders
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...