×

வேடந்தாங்கல் சரணாலயத்தில் ஆலைகளை அனுமதித்தது யார்?.... அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40 சதவீதம்  குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோமீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப்படுத்த முடிவு செய்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.

இப்போதுள்ள விதிப்படி, சரணாலயம் அமைந்துள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்  எந்த தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கோ, அதற்கு வெளியில் உள்ள ஆலைகளை சரணாலயப் பகுதிகளுக்குள் விரிவாக்கம் செய்யவோ அனுமதி கிடைக்காது. அதற்காகத் தான்  சரணாலயத்தின் நிலப்பரப்பை வகைப்படுத்தும் பணிகளை வனத்துறை தீவிரமாக மேற்கொள்கிறது. எனவே, தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து  சட்டப் போராட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் பாமக எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : sanctuary ,Vedanthangal , allowed , mills , Vedanthangal ,sanctuary?
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...