×

‘ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பாஜ தலைமைதான்: சர்ச்சைக்குரிய ஆடியோவால் பரபரப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் மத்திய பாஜ தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகி உள்ளது. மத்திய பிரசேதத்தில் சில மாதங்களுக்கு முன், காங்கிரஸ் இளம் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏ.க்களுடன் பாஜ.வில் இணைந்தார். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதன்பின், மபி முதல்வராக பாஜ.வின் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சி அமைத்தார். காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னணியில் பாஜ இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை பாஜ மறுத்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் மத்திய பாஜ தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்ற ரகசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பேசும் குரல் அச்சு அசலாக சவுகான் குரல் போலவே உள்ளது. ஆடியோவில், ‘ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது மத்திய தலைவர்கள் எடுத்த முடிவு. இல்லையென்றால், அது அனைத்து வீணாக்கி விடும். ஜோதிராதித்யா, துளசி சிலாவத் இல்லாமல் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? எனக்கு தெரிந்து வேறு வழியே இல்லை’,’ என குரல் பதிவாகி உள்ளது.

ஆனால், இந்த ஆடியோவில் பேசியது சிவ்ராஜ் சிங் சவுகான் தானா என்ற உண்மைத்தன்மை இன்னும் நிரூபணமாகவில்லை. இது குறித்து காங்கிஸ் தலைவர் நரேந்திர சலூஜா கூறுகையில், ‘‘சிவ்ராஜ் சிங் சவுகான் தனது வாயாலேயே உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். கமல்நாத் அரசை காலைவாரி விட்டதில் பாஜ.வுக்கு பங்கு இருக்கிறது. அதோடு, மத்திய பாஜ தலைமைதான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்ததும் இந்த ஆடியோ மூலம் உறுதியாகி உள்ளது,’’ என்றார். வழக்கம்போல், பாஜ இந்த ஆடியோ பதிவு தகவல்களை மறுத்து வருகிறது.



Tags : BJP ,Congress ,coup , BJP leadership, Congress's coup, MP, Excited , controversial audio
× RELATED ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜவை எதிர்க்க...