கராச்சி: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பந்தை பளபளப்பாக்க எச்சில் உபயோகிக்க தடைவிதித்திருப்பது பந்துவீச்சாளர்களை ரோபோக்களாக்கி விடும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகம் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: வேகப் பந்துவீச்சுக்கு அழகே பந்து காற்றில் ஊசலாடியபடி வந்து எப்படி திரும்பப்போகிறது என்றே கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டுவது தான். பந்தை பளபளப்பாக வைத்திருக்க எச்சிலை உபயோகிக்கக் கூடாது என்று தடை விதித்திருப்பதால் ஸ்விங் செய்வது மிக மிகக் கடினமாகிவிடும். பந்துவீச்சாளர்கள் எந்திர மனிதன் போல வந்து எந்த ஸ்விங்கும் இல்லாமல் கடனே என்று பவுல் செய்ய வேண்டியிருக்கும்.
பந்தை பளபளப்பாக்கி ஸ்விங் செய்ய எச்சில் தொட்டு பழகி வளர்ந்தவன் நான். அதே சமயம், இந்த சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். எனவே... வேகப் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பொறுமையாக இருப்பது அவசியம். வியர்வையை அதிகம் பயன்படுத்தினால் பந்து ஈரமாகிவிடும் ஆபத்து உள்ளது. வேசலின் போன்ற மாற்று பொருளை உபயோகிக்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கலாம். ஆனால் எந்த அளவுக்கு என்பதை தீர்மானிப்பது கடினம். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் என்ன நடக்கிறது என்று பார்த்த பிறகு இதில் ஒரு முடிவுக்கு வரலாம். எனக்கும் இதில் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு அக்ரம் கூறியுள்ளார்.