×

83 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொது தரிசனம் தொடங்கியது; கோவிந்தா,கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்...!

திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்கு பிறகு பொது தரிசனம் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடந்தது. ஆனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று கோயில், தேவாலயங்களில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடந்தப்பட்டது. கடந்த 80 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சில நிபந்தனைகளுடன் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க  மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுடன் திறக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் 78 நாட்களுக்கு  பிறகு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் ஊழியர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை முதல் பொது தரிசனம் தொடங்கியுள்ளது. இதற்கான 3000 டிக்கெட்டுகள் ரூ.300-க்கு ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட விடுதிகளில் உள்ள கவுண்டர்களில் 3000 இலவச டோக்கன்கள் நேற்று வழங்கப்படுகிறது. 83 நாட்களுக்கு பின் உற்சாகமாக கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.



Tags : darshan ,Govinda ,Tirupati Ezumalayan Temple ,Devotees ,Sami ,Govinda ... , After 83 days, a public darshan began at Tirupati Ezumalayan Temple; Devotees of Sami with the slogan of Govinda, Govinda ...
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...