×

எக்மோர் இல்ல இனி எழும்பூர்தான்.....! ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும்: அரசாணை வெளியீடு

சென்னை: ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் கம்பெனியாரின் ஆட்சிக்காலத்தின் போது ஏராளமான ஊர்களுக்கான தமிழ்ப்பெயர்கள் ஆங்கில மொழி வசதிக்காக வேறு எழுத்துகளால் குறிக்கப்பட்டன. குறிப்பாக, எழும்பூர் எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் என்றும், வண்ணாரப்பேட்டை வாஷர்மேன் பேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பிலிர்ந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதனை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழுத, உச்சரிக்க வேண்டும். தமிழகத்தில் எழும்பூர் என்று இருப்பதை ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வருகிறது. இனி மேல் தமிழை போன்று ஆங்கிலத்திலும் எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : home ,Exmore ,release ,Government , Egmore, Govt
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...