×

கல்குணம் ஊராட்சியில் ரூ34.40 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணிகளை முடிக்காமலேயே முடித்ததாக வைக்கப்பட்ட கல்வெட்டு

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குணம் ஊராட்சியில் தார்சாலை பணிகள் கிடப்பில் போடபட்டுள்ள நிலையில் முடிந்ததாக கல்வெட்டு வைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கல்குணம் கிராம மக்கள் செல்வதற்காக சென்னை - கும்பகோணம் சாலையை இணைக்கும் பரவனாறு அணை சாலை ரூ.34 லட்சத்தில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டது. இந்த சாலைப் பணிக்காக ஜல்லியும், செம்மண்ணும் கொட்டி சமன் செய்து கிடப்பில் போடப் பட்டுள்ளது.

இந்த சாலை கரடுமுரடான சாலையாக இருந்து வந்ததால் கல்குணம் கிராம மக்கள் அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக கிலோமீட்டர் தூரம் சுற்றி அதிக நேரம் செலவழிக்கும் சூழ்நிலையில் இருந்து வந்ததை கருத்தில் கொண்டு இந்த பரவனாறு அணை சாலை திட்டம் துவக்கப்பட்டது. சாலை பணிகளை விரைந்து முடித்தால் கல் குணம், பூதம்பாடி, குருவப்பன் பேட்டை, அந்தராசுபேட்டை உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மிக குறைந்த நேரத்தில் வடலூர் நகருக்கு செல்ல முடியும், 3க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். ஆறு மாத காலமாக தார்சாலை கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ஆனால் சாலை பணிக்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பணிகள் 21-4-2019ல் தொடங்கி 25-3-2020ல் முடிவுற்றதாகவும், மனித உழைப்பு நாட்கள் 1814 எனவும், எழுதப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது. பணிகளை முடிக்காமல் முடிக்கப்பட்டதாக கல்வெட்டு வைப்பது நியாயமா? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே கல்குணம் கிராமத்திற்கு செல்லும் பரவனாறு அணை சாலையை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kalgunam Panchayat ,Galkunam Panchayat , Galkunam Panchayat, Tarsal Works, Inscription
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...