×

80 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கம்: பயணிகள் வராததால் ஏமாற்றம்

திருச்சி: தமிழகத்தில் 80 நாட்களுக்கு பின் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கியது. பயணிகள் வருகை இல்லாததால் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்தநிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை, ரயில் சேவை, கால்டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் செயல்பட்டு வருகிறது. அரசு பேருந்து சேவையானது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலத்திற்குள் 50 சதவீத அரசு பேருந்துகள் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோல், தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தநிலையில், 80 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்து இயங்கும் என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. அந்த மண்டலங்களுக்குள்ளே பஸ்கள் இயக்கப்பட்டன. பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. டெல்டா மாவட்டமான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் 80 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கப்பட்டன. தஞ்சையில் பட்டுக்கோட்டை, திருச்சிக்கு 2 பஸ்களும், டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன.

முதல்நாளான இன்று பஸ்களுக்கு வாழைமரம், தோரணம் கட்டி பூஜை செய்த பின் பஸ்களை டிரைவர்கள் இயக்கினர். பஸ்சில் பயணிகள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் சில பஸ்களை டெப்போவுக்கு எடுத்துசென்றுவிட்டனர். பஸ்களில் பயணிகளுக்கு வசதியாக சானிடைசர் பொருத்தப்பட்டிருந்தது. சில பஸ்களில் கண்டக்டர்கள் பயணிகளுக்கு சானிடைசர் வழங்கினர். 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

திருவாரூரில் 69 தனியார் பஸ்கள் இயங்கின. பயணிகள் வராததால் கலெக்ஷ்ன் உள்ள இடங்களில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. திருச்சியிலும் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டது. பஸ்களுக்கு பூமாலை தோரணம் கட்டி சூடம் ஏற்றி டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இங்குள் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால் பஸ்சை இயக்காமல் டிரைவர்கள் பஸ் ஸ்டாண்டிலே நிறுத்தியிருந்தனர். இதேபோல் பெரம்பலூர், அரிலூர், கரூர் மாவட்டத்திலும் குறைந்த எண்ணிக்கையிலான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. புறநகர் பஸ்கள் ஒன்றிரண்டு எண்ணிக்கையிலே இயக்கப்பட்டது.

இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், 60 சதவீதம் பயணிகளுடன் பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 சதவீதம் பயணிகள் கூட வரவில்லை. இதனால் பஸ்சை இயக்கினாலும் நஷ்டம் தான் ஏற்படும். அதனால் பயணிகள் வருகையை பொறுத்து அந்த இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.

பஸ்களில் சானிடைசர் பொருத்தம்
தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்களாகவே சானிடைசர் பயன்படுத்திக்கொள்ள வசதியாக பெரும்பாலான தனியார் பஸ்களில் ஸ்டாண்ட் அமைத்து சானிடைசர் பொருத்தப்பட்டுள்ளது. இதை காலில் மிதித்து பிரஸ் செய்தால் சானிடைசர் கைகளில் வரும். இதை பயணிகள் பயன்படுத்தினர்.

Tags : Private buses, mobility, frustration
× RELATED தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில்...