×

2020 - 21-ம் நிதியாண்டுக்கான ஜூன் மாத தவணை ஒதுக்கீடு: தமிழகத்துக்கு ரூ.335 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

டெல்லி: 2020 - 21-ம் நிதியாண்டுக்கான அடுத்த தவணையாக தமிழகத்துக்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் கூடுதல் நிதி மாநிலங்களுக்கு பயனளிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்காட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும் என துணை முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த மாதம் 2வது தவணையாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்தது. கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3வது தவணையாக ரூ.335.41 கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுத்துள்ளது.  தமிழகத்தை போலவே மொத்தம் 14 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூ.631 கோடியும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு ரூ.952 கோடியும், கேரளாவிற்கு 1276 கோடியும், மணிப்பூருக்கு ரூ.235 கோடியும், மேகாலாய மாநிலத்திற்கு ரூ.40 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118 கோடியும், நாகலாந்துக்கு ரூ.326 கோடியும், பஞ்சாபுக்கு ரூ.638 கோடியும், திரிபுராவுக்கு ரூ.269 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.423 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.417 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Central Government ,Rs , Fiscal year, installment, Tamil Nadu, central government
× RELATED மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில்...