×

ஊரடங்கு காலத்தில் போதிய அளவுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளோம் : குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு வாதம்

சென்னை : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.1000 போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிவாரண தொகை அமைப்பு சாரா தொழிலாளர்களை சென்றடையவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது, ரூ.5000யும், 20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி இருந்த ரவி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டு இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி சுரேஷ் குமார் அமர்வு, ஜூலை மாதத்திற்குள் மனுவுக்கு பதிலளிக்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு, போதிய அளவுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags : curfew ,government ,Rs ,Tamil Nadu , Curfew, relief aid, family, Rs
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...