×

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசால் இறப்பும் அதிகரிப்பு இரவோடு இரவாக எரிக்கப்படும் சடலங்கள்

* அதிகாரிகள் மிரட்டலால் மருத்துவமனைகள் வாய்திறக்க மறுப்பு

வேலூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து கொரோனா வைரஸ் பாதித்த நபர்களை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ்களில் அழைத்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதித்ததாக அரசு புள்ளி விவரங்களில் வெளியிடப்படவில்லை. அதேபோல் சிலர் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் சர்வ சாதாரணமாக வெளியே சுற்றித்திரிகின்றனர். ஒரு சில நாட்களில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் அவர் தொடர்பு கொண்ட நபர்களை பட்டியலிடுவதிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டால், அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்றும் வேறு நோய் இருந்ததால் அதன் தாக்கத்தில் தான் இறந்துள்ளார் என்றும் மாற்றுகின்றனர். மேலும் சடலத்தை வெகுநேரம் வைத்திருக்காமல் உடனடியாக எரித்துவிடும்படி வற்புறுத்துவதுடன் பிளாஸ்டிக் கவரால் சுற்றி சடலத்தை கொடுகின்றனர். கொரோனா அச்சத்தில் உறவினர்களும் உடனடியாக எரித்து விடுகின்றனர்.வேலூரில் தற்போது சில இடங்களில் உறவினர்களின் அனுமதியோடு மருத்துவ ஊழியர்களே ஆம்புலன்சில் கவரில் சுற்றிய சடலங்களை இரவில் ஏற்றிச்சென்று சுடுகாடு உள்ள பகுதி மற்றும் பாலாற்றங்கரைகளில் இரவோடு இரவாக எரித்து விடுகின்றனர்.

இது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதற்கேற்ப தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதில் கூட அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். வேலூரில் முதன்முதலாக சைதாப்பேட்டையை சேர்ந்த நபர் கொரோனாவுக்கு பலியானார். அவர் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிரிழக்கும் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.  இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் எலுமிச்சை வியாபாரம் செய்பவரின் மனைவி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். ஆனால் உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவு வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா குணமாகி இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அவர் கொரோனாவுக்கு பலியாகவில்லை என்று சான்றளித்தனர். மேலும் பேரணாம்பட்டை சேர்ந்த 20 வயதான 7 மாத கர்ப்பிணி கொரோனாவால் பாதித்து, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் அவர் பேறுகால மரணம் அடைந்ததாக கூறிய அதிகாரிகள் கொரோனா உயிரிழப்பில் கணக்கு காட்டவில்லை. இதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் கொரோனா பாதித்த சிலர், சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் வேலூருக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது.இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களை, வேறு சில காரணங்களால் உயிரிழப்பதாக மருத்துவ அதிகாரிகள் கூறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியை சேர்ந்த 60 வயது மூதாட்டி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவருக்கு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யும் நிலையில் இருந்தபோது, மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவரை கொரோனா பலியில் கணக்கு காட்டவில்லை.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மருத்துவத்துறையினர் உயிரை பணயம் வைத்துதான் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மருத்துவமனைகளிலும் சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை வெளியே சொல்பவர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என்றும், பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும் என்றும் மறைமுகமாக எச்சரிக்கப்படுகிறது. இதனால்தான் கொரோனா விவரங்களை முழுமையாக வெளியிட முடியவில்லை’ என்றனர்.அதிகாரிகளின் இந்த மிரட்டலால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பணிபுரியும் நர்சுகள், டாக்டர்களில் ஆரம்பித்து டீன் வரை வாய் திறக்க மறுக்கின்றனர். அதேபோல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் விவரங்களையும் முழுமையாக வெளியிடுவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். பெரும்பாலான அதிகாரிகள் செல்போன் அழைப்பை கூட எடுப்பதில்லை.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகத்தை குறைத்து காட்டுவதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை மறைத்து மக்களின் உயிரோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதே அனைவரின் கேள்வி. கொரோனா தொற்று தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து போராடி வருவதை மறுக்க முடியாது. ஆனால், ஆரம்பத்தில் பாதிப்பு விவரங்களை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஊரடங்கு அமல்படுத்தினால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே கொரோனா பாதிப்பில் வெளிப்படை தன்மை அவசியம் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Tags : death , Increase , death , coronavirus spreading, lightning speed
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்