×

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை மிஞ்சியது மகாராஷ்டிரா

* மொத்த பாதிப்பு 90 ஆயிரம் தாண்டியது
* ஒரேநாளில் மேலும் 120 பேர் பலி

மும்பை:  இன்று ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுகான் நகரில்தான் கண்டறியப்பட்டது. பலரை பலி வாங்கிய கொரோனா தீவிர நடவடிக்கைகள் காரணமாக சீனாவின் வெளி மாகாணங்களுக்கு பரவுவது பெருமளவில் தடுக்கப்பட்டது. வுகானை தலைநகரமாக கொண்ட ஹூபே மாகாணத்தில் மொத்தம் 68,135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 63,620 பேர் குணமடைந்து விட்டனர். எஞ்சிய 4,512 பேர் பலியானதாக சீன அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,040 ஆகத்தான் உள்ளது. இதில் 78,341 பேர் குணமடைந்து விட்டனர். 4,634 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்திலோ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக மாறியிருக்கும் மும்பை மாநகரில் மட்டும் இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று வைரஸ் தாக்குதலில் இந்தியாவின் மையமாக மாறிவிட்ட மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என அஞ்சப்படுகிறது. நேற்று முன்தினம் வரை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 88,528 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,169 ஆகவும் இருந்தது. மும்பையில் மட்டும் நேற்று முன்தினம் வரை இந்த கொடிய வைரசுக்கு 50,085 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 1,702 பேர் பலியாகியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரையிலான 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் மேலும் 2,259 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,787 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் மேலும் 120 உயிரிழப்புகள் பதிவானது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,289 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் சீனாவை விட மகாராஷ்டிராவில் 7,747 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்பில் மகாராஷ்டிராவை விட சீனாவில் கூடுதலாக 1,345 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிரா முழுவதும் நேற்று 1,663 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 42,638 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,341 என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் தற்போது 44,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் மட்டும் நேற்று மேலும் 1,015 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, நகரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,100 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra ,coronavirus attack ,China , Maharashtra outperforms, China , global coronavirus attack
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி